ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் பெறுவதற்கு எங்கள் ஆட்சியில் கடிவாளம் போடப்படும்-முதல்-மந்திரி சித்தராமையா உறுதி


ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் பெறுவதற்கு எங்கள் ஆட்சியில் கடிவாளம் போடப்படும்-முதல்-மந்திரி சித்தராமையா உறுதி
x
தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 24 Jun 2023 4:13 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவின் தவறான ஆட்சியால் நிதி நிலைமை மோசமாகி இருப்பதாகவும், ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் பெறுவதில் எங்கள் ஆட்சியில் கடிவாளம் போடப்படும் என்றும் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:-

சித்தராமையாவுடன் சந்திப்பு

பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையாவை, அரசு ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா மற்றும் உறுப்பினர்கள் சந்தித்து பேசினார்கள். அப்போது பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் அரசு பணிகளை மேற்கொண்டதற்காக பாக்கி வைத்துள்ள ஒப்பந்த தொகையை உடனடியாக விடுவிக்கும்படி முதல்-மந்திரி சித்தராமையாவிடம், கெம்பண்ணா கேட்டுக் கொண்டார்.

பெங்களூரு மாநகராட்சி ரூ.2 ஆயிரம் கோடியும், நகர வளர்ச்சித்துறை ரூ.1,500 கோடி ஒப்பந்த தொகை வழங்காமல் பாக்கி வைத்திருப்பதாகவும், அதனை ஒட்டு மொத்தமாக விடுவிக்க வேண்டும் என்று முதல்-மந்திரியிடம் கெம்பண்ணா கேட்டுக் கொண்டார். மேலும் கர்நாடக மாநில அரசு ஒப்பந்ததாரர்களுக்கு வளர்ச்சி பணிகளை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கும்படியும் அவர் கோரிக்கை வைத்தார்.

கமிஷனுக்கு கடிவாளம்

அப்போது முதல்-மந்திரி சித்தராமையா ஒப்பந்ததாரர்களிடம் பேசியதாவது:-

பா.ஜனதா கட்சியினர் மாநிலத்தில் தவறவான ஆட்சி நிர்வாகத்தை கொடுத்திருந்தனர். இதன் காரணமாக நிதி நிலைமை மிகவும் மோசமாகி இருந்தது. நிதி நிலைமை மோசமாகி இருப்பதால் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய ஒப்பந்த தொகை வழங்கப்படாமல் பாக்கி வைத்திருந்தனர். பா.ஜனதா ஆட்சியில் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து கமிஷன் பெறப்பட்டது. இதனால் ஒப்பந்ததாரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

ஒப்பந்ததாரர்களின் நலன் கருதி, எங்கள் ஆட்சியில் கமிஷனுக்கு கடிவாளம் போடப்படும். பா.ஜனதா ஆட்சியில் மோசமான நிதி நிலைமை சரியாக இன்னும் சிறிது காலம் ஆகும். மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பட்ஜெட் கூட்டம் முடிந்த பின்பு மாநகராட்சி அதிகாரிகள், நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து ஒப்பந்ததாரர்களுக்கான தொகையை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story