நமது இளைஞர்கள் 4 குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும்: சமூக விழாவில் உ.பி. மந்திரி பேச்சு


நமது இளைஞர்கள் 4 குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும்: சமூக விழாவில் உ.பி. மந்திரி பேச்சு
x

உத்தர பிரதேச மந்திரி சமூக விழா ஒன்றில் பேசும்போது, நமது இளைஞர்கள் இரண்டல்ல, குறைந்தது 4 குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என பேசியுள்ளார்.

ஜெய்ப்பூர்,

உத்தர பிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது. அவரது அரசில் ரகுராஜ் சிங் என்பவர் மந்திரியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், ஸ்ரீ ராஷ்டீரிய ராஜ்புத் கர்ணி சேனா அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கேசாரியா மகாபஞ்சாயத்து என்ற நிகழ்ச்சியில் ரகுராஜ் சிங் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, நமது மக்கள் தொகையை கட்டுப்படுத்த நாம் முயற்சி செய்ய கூடாது. நமது இளைஞர்கள் இரண்டல்ல, குறைந்தது 4 குழந்தைகளையாவது பெற்று கொள்ள வேண்டும் என பேசியுள்ளார்.

உங்களால் அந்த குழந்தைகளை வளர்த்து, பராமரிக்க முடியாவிட்டால், அவர்களை எங்களிடம் கொடுங்கள். நாங்கள் அவர்களை வளர்க்கிறோம் என்று பேசியுள்ளார்.

இந்திய மக்கள் கடந்த காலங்களில் செய்த பல்வேறு தவறுகளால் ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து அவர்கள் அடிமையாக இருந்து வருகிறார்கள். அதுபோன்ற தவறுகளை மீண்டும் செய்யாதீர்கள் என கூட்டத்தினரை நோக்கி அவர் வலியுறுத்தினார்.

நமது பலம் பற்றி மீண்டும் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது. பாகிஸ்தான், சீனா நாடுகளுக்கு நாம் ஒரு பாடம் கற்று தந்து இருக்கிறோம். ஜெய்ப்பூரில் இருந்து நாட்டின் மற்ற பகுதிகளுக்கு ஒரு செய்தியை நாம் கொண்டு செல்ல வேண்டும். இந்தியாவில் நிறுவப்பட்ட ராமராஜ்ஜியம் ஒருவராலும் நிறுத்த முடியாது என்பதே அது ஆகும் என்று அவர் பேசியுள்ளார்.


Next Story