ஊழல் எதிர்ப்பு ஹெல்ப்லைன் மூலம் 3 லட்சம் புகார் - பஞ்சாப் அரசு தகவல்


ஊழல் எதிர்ப்பு ஹெல்ப்லைன் மூலம் 3 லட்சம் புகார் -  பஞ்சாப் அரசு தகவல்
x
தினத்தந்தி 23 July 2022 2:54 PM GMT (Updated: 23 July 2022 3:08 PM GMT)

ஊழலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. காங்கிரஸ் கட்சியை ஆட்சியை விட்டு அகற்றிவிட்டு ஆம் ஆத்மி அங்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது. ஆம் ஆத்மி தேர்தல் பிரச்சாரத்தில் லஞ்சம், ஊழலற்ற ஆட்சி என்ற வாக்குறுதி பிரதானமாக இருந்தது. அந்த வாக்குறுதிக்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பின் காரணமாக ஆம் ஆத்மி மிகப்பெறும் வெற்றி பெற்றது.

அதனையடுத்து, ஆம் ஆத்மி சார்பில் பகவந்த் மான் பஞ்சாப் மாநிலத்தின் 17-வது முதல்-மந்திரியாகபதவியேற்றார். பஞ்சாப் மாநிலத்தில் ஊழல், வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்று பகவந்த் சிங் உறுதியளித்தார்.

இந்தநிலையில்,

ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளின் ஆடியோ அல்லது வீடியோக்களை அனுப்புவதற்கு மக்களை அனுமதிக்கும் ஊழலுக்கு எதிரான ஹெல்ப்லைனை மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியது. இதையடுத்து, ஊழலுக்கு எதிரான புகார்களை பஞ்சாப் விஜிலென்ஸ் ஆய்வு செய்கிறது.

அதன்படி, ஊழலுக்கு எதிரான ஹெல்ப்லைனில் இதுவரை மூன்று லட்சத்துக்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளதாகவும், ஊழலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

மேலும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை குறித்து தினமும் 2500 புகார்கள் பெறப்படுவதாக பஞ்சாப்பை ஆளும் ஆம் த்மி கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில், எங்கள் கனவு-- ஊழல் இல்லாத பஞ்சாப் என்று குறிப்பிட்டிருந்தது.


Next Story