18 வயதுக்கு மேற்பட்டோரில் 89 சதவீதத்தினருக்கு 2 'டோஸ்' தடுப்பூசி - மத்திய மந்திரி தகவல்


18 வயதுக்கு மேற்பட்டோரில் 89 சதவீதத்தினருக்கு 2 டோஸ் தடுப்பூசி - மத்திய மந்திரி தகவல்
x

கோப்புப்படம்

கொரோனாவுக்கு எதிராக 18 வயதானோரில் 89 சதவீதத்தினருக்கு 2 ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கொரோனாவுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி திகழ்கிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி முன்கள பணியாளர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடுவது தொடங்கியது. பின்னர் அது பல கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி முதல் 12-14 வயது சிறுவர், சிறுமியருக்கும் தடுப்பூசி போடுவது தொடங்கியது.

அதுமட்டுமின்றி கடந்த ஏப்ரல் மாதம் 10-ந்தேதி முதல் 18 வயதான அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் போடப்படுகிறது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்தியா கையில் எடுத்து, அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு குறைவான காலத்தில் தடுப்பூசி போட்டு அசத்தி வருகிறது.

அந்த வகையில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 18 வயதானோரில் 89 சதவீதத்தினருக்கு 2 'டோஸ்' தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. இதை மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர், "வாழ்த்துகள் இந்தியா. சப்கா சாத் சப்கா பிரயாஸ் (அனைவரின் ஒற்றுமையும், மேம்பாடும்) என்ற மந்திரத்துடன், இந்தியா தனது வயது வந்த மக்களில் 89 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட்டு சாதித்துள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம், புதிய முத்திரைகளை தொடர்ந்து பதித்து வருகிறது" என குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், "12-14 வயதானோரில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். எனது இளம் நண்பர்கள் அனைவரும் தாமாக முன்வந்து, கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியினை விரைவில் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்" எனவும் கூறி உள்ளார்.

நாட்டில் 36 லட்சத்து 61 ஆயிரத்து 899 முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசிகள் 18-59 வயது பிரிவினருக்கு செலுத்தப்பட்டுள்ளன.

15-18 வயது பிரிவினரில் 5.99 கோடி பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.


Next Story