மாநிலங்களவைக்கு 41 பேர் போட்டியின்றி தேர்வு: 14 இடங்களில் பா.ஜனதா வெற்றி


மாநிலங்களவைக்கு 41 பேர் போட்டியின்றி தேர்வு: 14 இடங்களில் பா.ஜனதா வெற்றி
x

கோப்புப்படம்

பல்வேறு மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

புதுடெல்லி,

15 மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு விரைவில் காலியாக உள்ள 57 இடங்களுக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக பா.ஜனதா, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் நடந்தது. இந்த வேட்புமனுக்கள் பரிசீலனை முடித்து, திரும்ப பெறுவதற்கான காலக்கெடுவும் நேற்றுடன் முடிவடைந்தது.

இதில் 41 இடங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக பா.ஜனதாவுக்கு 14 இடங்கள் கிடைத்துள்ளன.

அடுத்ததாக காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் தலா 4 இடங்களையும், தி.மு.க., பிஜூ ஜனதாதளம் கட்சிகள் தலா 3 உறுப்பினர்களையும், ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதாதளம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, அ.தி.மு.க. கட்சிகள் தலா 2 எம்.பி.க்களையும் பெற்றுள்ளன. இதைத்தவிர ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ஐக்கிய ஜனதாதளம், சமாஜ்வாடி, ராஷ்டிரிய லோக்தளம் கட்சிகள் தலா ஓரிடத்தையும், சுயேச்சை ஒருவரும் வென்றுள்ளனர்.

வெற்றி பெற்றவர்களில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கபில்சிபல், லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதி, பா.ஜனதாவின் சுமித்ரா வால்மிகி, கவிதா பதிதார் ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர். மீதமுள்ள 16 இடங்களுக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.


Next Story