அரியானாவில் பத்ம விருது பெற்றவர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் - முதல்-மந்திரி அறிவிப்பு


அரியானாவில் பத்ம விருது பெற்றவர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் - முதல்-மந்திரி அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Jun 2023 4:28 PM GMT (Updated: 12 Jun 2023 4:36 PM GMT)

அரியானாவில் பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி அறிவித்துள்ளார்.

சண்டிகர்,

அரியானா மாநிலத்தில் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் உள்ளிட்ட பத்ம விருதுகளை பெற்றவர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார். மேலும் பத்ம விருதுகள் பெற்றவர்கள் மாநில அரசின் வால்வோ பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

கர்னால் மாவட்டத்திற்கு வருகை தந்த அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-

மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்காக அரசு பல்வேறு நலக் கொள்கைகளை வகுத்துள்ளது. எங்கள் அரசின் திட்டங்களால் மக்கள் நேரடியாக பலன்களைப் பெறுகிறார்கள். பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை பயனாளிகளின் கணக்கில் நேரடியாகச் செல்கிறது.

ஆண்டு வருமானம் ரூ.1.80 லட்சம் வரை உள்ள குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீட்டுதொகை மாநில அரசு வழங்கி வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் ஆண்டு வருமானம் ரூ.1.80 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வரை உள்ள குடும்பங்களுக்கும் ரூ.5 லட்சம் வரை காப்பீட்டுத்தொகை வழங்க அரசு பரிசீலித்து வருகிறது.

குடும்ப அடையாள அட்டை திட்டம் பரிவார் பெஹ்சான் பத்ராவின் கீழ், 12.5 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போதைய அரசால் தொடங்கப்பட்ட தகுதி அடிப்படையிலான வேலை முறையை மக்கள் பாராட்டியுள்ளனர். மேலும் இது முன்பு நடைமுறையில் இருந்த முறைக்கு எதிராக வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story