ராகுல்காந்தி பாதயாத்திரையில் பாகிஸ்தான் வாழ்த்து கோஷமா? பா.ஜனதா வெளியிட்ட வீடியோவுக்கு காங்கிரஸ் மறுப்பு


ராகுல்காந்தி பாதயாத்திரையில் பாகிஸ்தான் வாழ்த்து கோஷமா? பா.ஜனதா வெளியிட்ட வீடியோவுக்கு காங்கிரஸ் மறுப்பு
x

ராகுல்காந்தி பாதயாத்திரையில் பாகிஸ்தானை வாழ்த்தி கோஷம் எழுப்புவது போல், பா.ஜனதா வெளியிட்ட வீடியோ போலியானது என்று காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ராகுல்காந்தி பாதயாத்திரையில் பாகிஸ்தானை வாழ்த்தி கோஷம் எழுப்புவது போல், பா.ஜனதா வெளியிட்ட வீடியோ போலியானது என்று காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.

பா.ஜனதா தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா, காங்கிரஸ் பாதயாத்திரை வீடியோ ஒன்றை வெளியிட்டார். அது, 21 வினாடிகள் ஓடக்கூடியது. ராகுல்காந்தி, பிரியங்கா, மத்தியபிரதேச முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத் ஆகியோர் அதில் நடந்து வருகிறார்கள்.வீடியோ முடிவடையும் நேரத்தில், 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்ற கோஷம் கேட்கிறது.வீடியோவை வெளியிட்ட அமித் மாளவியா, ''ஒரு காங்கிரஸ் எம்.பி. இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பிறகு திடீரென நீக்கி விட்டார். இதுதான் காங்கிரசின் உண்மை முகம்'' என்று கூறியுள்ளார்.

இந்தநிலையில், இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் பாதயாத்திரை மகத்தான வெற்றி பெற்றுள்ளது. அதை பொறுக்காமல், பா.ஜனதாவின் மலிவான தந்திரங்கள் துறை தயாரித்த போலி வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.அந்த வீடியோவை பா.ஜனதா நீக்க வேண்டும். இல்லாவிட்டால், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். இதற்கு நாங்களும் மலிவான தந்திரங்கள் மூலம் பதிலடி கொடுப்போம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நீக்குங்கள்

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேட் கூறியிருப்பதாவது:-

பாதயாத்திரையின் வெற்றி, உங்களது காலடியில் உள்ள நிலத்தை உலுக்கி விட்டதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. அது மனரீதியாக உங்களுக்கு ஏற்படுத்திய அதிர்ச்சிக்கு வருந்துகிறோம். அந்த போலி வீடியோவை நீக்குங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட மற்றொரு பதிவில், மத்தியபிரதேசத்தில் பழங்குடியினர் ராகுல்காந்தியை சந்திக்க விடாமல் மாநில அரசு தடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story