பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த ஆளில்லா விமானம் தடுத்து நிறுத்தம் - 2 கிலோ ஹெராயின் பறிமுதல்!
பஞ்சாபில் பாகிஸ்தான் எல்லையில், போதைப்பொருளை ஏற்றிச் சென்ற ஆளில்லா டிரோன் விமானம் எல்லை பாதுகாப்புப் படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது.
அமிர்தசரஸ்,
பஞ்சாபில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில், போதைப்பொருளை ஏற்றிச் சென்ற ஆளில்லா டிரோன் விமானம் எல்லை பாதுகாப்புப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது.
நேற்று இரவு சுமார் 8:30 மணியளவில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் செக்டரில் உள்ள எல்லைப் பகுதியான கலாம் டோகர் பகுதியில் 183 வது பட்டாலியனைச் சேர்ந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தினர் என்று எல்லை பாதுகாப்புப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த எல்லைப்பகுதியில் கடந்த நான்கு நாட்களில் ஆளில்லா விமானத்தை இடைமறித்து சுட்டு வீழ்த்திய மூன்றாவது சம்பவம் இதுவாகும்.2 கிலோ எடையுள்ள இரண்டு போதைப்பொருள் பாக்கெட்டுகள் டிரோனுடன் மீட்கப்பட்டன.
இது குறித்து எல்லை பாதுகாப்புப்படை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நமது ராணுவ வீரர்களுக்கு இது ஒரு புதிய சவால். நேற்றிரவு நமது ராணுவ வீரர்கள் ஆளில்லா விமானத்தின் சத்தம் கேட்டு அதை நோக்கி சுட்டனர். பின்னர், தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.அப்போது 2 கிலோ ஹெராயினுடன் ஆளில்லா விமானம் மீட்கப்பட்டது.டிரோன் எடை சுமார் 12 கிலோ இருக்கும்" என்று தெரிவித்தார்.
கடந்த ஒன்பது மாதங்களில், அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் 191 ஆளில்லா விமானங்கள் சட்டவிரோதமாக நுழைந்ததை பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். அதில் 171 டிரோன்கள் பஞ்சாப் செக்டார் பகுதி வழியாகவும், 20 டிரோன்கள் ஜம்மு செக்டார் பகுதி வழியாகவும் பாகிஸ்தானிலிருந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருள் இந்தியாவுக்குள் கடத்தப்படுகிறது. இந்தியா பாகிஸ்தான் சர்வதேச எல்லை பகுதிகளில் ஆங்காங்கே கேம்ப் அமைத்து இருக்கும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகள் இந்த நடவடிக்கைகளுக்கு பின்னால் உள்ளன.