லஞ்சமாக வாங்கிய ரூ.50 ஆயிரத்தை தீயிட்டு கொளுத்திய பஞ்சாயத்து உறுப்பினர் கைது


லஞ்சமாக வாங்கிய ரூ.50 ஆயிரத்தை தீயிட்டு கொளுத்திய பஞ்சாயத்து உறுப்பினர் கைது
x

லோக் அயுக்தா போலீசார் கைது செய்ய வந்தபோது இறைச்சி கடை உரிமையாளரிடம் லஞ்சமாக வாங்கிய ரூ.50 ஆயிரத்தை பஞ்சாயத்து உறுப்பினர் தீயிட்டு கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது.

சிவமொக்கா:

ரூ.50 ஆயிரம் லஞ்சம்

சிவமொக்கா மாவட்டம் சாகர் அருகே ஜோக் டவுன் பஞ்சாயத்து உறுப்பினராக இருப்பவர் ஹரிஷ் கவுடா. இதேபோல் அதேப்பகுதியை சேர்ந்தவர் அகமது அப்துல் பேரி. கோழி இறைச்சி கடை வியாபாரி.

இதற்கிடையே இறைச்சி கடை அனுமதி இன்றி நடத்துவதாகவும், இறைச்சி கழிவுகளை கால்வாயில் கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதாக கூறி கடையை மூடும்படி அகமது அப்துலுக்கு, பஞ்சாயத்து நோட்டீசு அனுப்பியுள்ளது.

இதனால் சிக்கலில் மாட்டிக்கொண்ட அகமது அப்துல், பஞ்சாயத்து உறுப்பினர் ஹரிஷ் கவுடாவின் உதவியை நாடினார். அப்போது அவர், அகமது அப்துலிடம் மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் லஞ்சம் தந்தால் கடைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதற்கு அகமது அப்துல் ஒரே நேரத்தில் மொத்தமாக சேர்த்து ரூ.50 ஆயிரம் லஞ்சமாக தருகிறேன் என்றுள்ளார். அதற்கு ஹரிஷ் கவுடா சம்மதம் தெரிவித்துள்ளார்.

தீயிட்டு கொளுத்தினார்

இதற்கிடையே லஞ்சம் கொடுக்க விரும்பாத அகமது அப்துல், லோக் அயுக்தா போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார், அகமது அப்துலிடம் ரசாயனம் தடவிய ரூ.50 ஆயிரத்தை கொடுத்து அதனை கொடுக்கும்படி சில அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர்.

அதன்படி நேற்றுமுன்தினம் அகமது அப்துல், ஹரிஷ் கவுடாவின் வீட்டிற்கு சென்று ரூ.50 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார்.

அதனை ஹரிஷ் கவுடாவும் வாங்கி கொண்டார். இதனை மறைவாக நின்று கவனித்த லோக் அயுக்தா போலீசார், அவரை கைது செய்ய வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரிஷ் கவுடா, கைது நடவடிக்கைக்கு பயந்து வீட்டில் சமையலறைக்கு சென்று கியாஸ் அடுப்பில் தீப்பற்ற வைத்து பணத்தை போட்டு கொளுத்தினார்.

கைது

இதையடுத்து போலீசார் வந்து பணத்தை கைப்பற்றி, ஹரிஷ் கவுடாவை கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story