பரமேஸ்வர், ஆர்.வி.தேஷ்பாண்டே பெயர்கள் அடிபடுகின்றன


பரமேஸ்வர், ஆர்.வி.தேஷ்பாண்டே பெயர்கள் அடிபடுகின்றன
x

கர்நாடக சட்டசபை சபாநாயகர் பதவிக்கு பரமேஸ்வர், ஆர்.வி.தேஷ்பாண்டே பெயர்கள் அடிபடுகின்றன.

பெங்களூரு, மே.20-

சட்டசபை சபாநாயகர் பதவி

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. கர்நாடக புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா இன்று (சனிக்கிழமை) பதவி ஏற்கிறார். இதற்கான விழா பெங்களூருவில் நடக்கிறது. அவருடன் 20-க்கும் மேற்பட்ட புதிய மந்திரிகளும் பதவி ஏற்க இருக்கிறார்கள். இந்த நிலையில் மூத்த எம்.எல்.ஏ.க்களில் ஒருவருக்கு சட்டசபை சபாநாயகர் பதவி வழங்க காங்கிரஸ் ஆலோசித்து வருகிறது. மூத்த எம்.எல்.ஏ.க்களான ஆர்.வி.தேஷ்பாண்டே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் பரமேஸ்வர் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகின்றன.

விசுவாசமான எம்.எல்.ஏ.

ஆனால் பெரும்பாலான மூத்த எம்.எல்.ஏ.க்கள் மந்திரி பதவியையே விரும்புகிறார்கள். ஆனால் கட்சிக்கு விசுவாசமான மூத்த எம்.எல்.ஏ.வை சபாநாயகர் பதவியில் அமர்த்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகிறார்கள்.

ஏனெனில் ஒருவேளை பா.ஜனதா ஆபரேஷன் தாமரை மூலம் எம்.எல். ஏ.க்களை இழுத்தால், அத்தகைய நெருக்கடியான நேரத்தில் ஆட்சிக்கு ஆதரவாக செயல்படும் ஒருவருக்கு அந்த பதவி வழங்க காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகிறார்கள்.

ரமேஷ்குமார்

கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ்- ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் காங்கிரசை சேர்ந்த ரமேஷ்குமார் சபாநாயகராக பதவி வகித்தார். அதைத்தொடர்ந்து பா.ஜனதா ஆட்சியில் விஸ்வேஸ்வர காகேரி சபாநாயகராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருமே கர்நாடக சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story