குறைந்த செலவில் புற்றுநோய் சிகிச்சை - மத்திய சுகாதாரத்துறை செயலாளருடன் நாடாளுமன்ற குழு முக்கிய ஆலோசனை!


குறைந்த செலவில் புற்றுநோய் சிகிச்சை - மத்திய சுகாதாரத்துறை செயலாளருடன் நாடாளுமன்ற குழு முக்கிய ஆலோசனை!
x

புற்றுநோய் சிகிச்சைக்கான செலவுத் தொகை குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளருடன் நாடாளுமன்றக் குழு இன்று விவாதிக்க உள்ளது.

புதுடெல்லி,

புற்றுநோய் சிகிச்சைக்கான செலவுத் தொகை குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளருடன் நாடாளுமன்றக் குழு இன்று விவாதிக்க உள்ளது.

அதன்படி, அதிகரித்து வரும் செலவுகளுக்கு மத்தியில், மலிவு விலையில் புற்றுநோய் சிகிச்சை குறித்து விவாதிக்க இன்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷனை நாடாளுமன்ற குழு சந்திக்க உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் தொடர்பான நாடாளுமன்றக் குழு, மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷனை சந்திக்கவுள்ளது. பாராளுமன்ற வளாகத்தில் பிற்பகல் 3 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்தியாவில் அதிக உயிரிழப்புக்கான முக்கிய காரணமாக புற்றுநோய் மாறியுள்ளது.

இந்தியாவில் புற்றுநோயால் 2018 ஆம் ஆண்டில் 7.84 லட்சம் இறப்புகள் பதிவாகின., இந்த எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டில் 13.92 லட்சமாக உயர்ந்துள்ளது.

நோய் உள்ளதா என்பதை அறிவதற்கான ஆரம்பகட்ட பரிசோதனை, பின் முறையான நீண்டநாள் சிகிச்சை, கண்காணிப்பு, மருந்துகள், சிகிச்சைக்கு பின் கவனிப்பு என புற்றுநோய் சிகிச்சைக்கான செலவு இந்தியாவில் அதிகம்.

இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சைக்கான சராசரி மொத்த செலவு ரூ.1,16,218 என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை செலவு தோராயமாக ரூ. 1,41,774 ஆக உள்ளது, பொது மருத்துவமனைகள் ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் சிகிச்சை அளிக்கின்றன (மதிப்பீடுகள் ரூ. 72,092 ஆக இருக்கும்).

பல மாநிலங்களில் புற்றுநோய் சிகிச்சையின் மொத்த செலவு மாறுபடுகிறது. ஒடிசா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், பீகார் மற்றும் அரியானா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் சிகிச்சையின் மொத்த செலவு ரூ. 1 லட்சத்திற்கும் குறைவாக இருந்தது. மற்ற மாநிலங்களில் சிகிச்சையின் மொத்த செலவு இதைவிட அதிகமாக உள்ளது.


Next Story