காஷ்மீரில் வெளியூர் வாக்காளர்கள் சேர்ப்பா? எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு பா.ஜனதா பதிலடி
வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை வாக்காளர்களாக பதிவு செய்ய முயற்சி நடப்பதாகவும் காங்கிரஸ், தேசிய மாநாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
ஸ்ரீநகர்,
காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 25 லட்சம் கூடுதல் வாக்காளர்கள் இருப்பார்கள் எனவும், அவர்கள் தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம் எனவும் தேர்தல் அதிகாரி ஹிர்தேஷ் குமார் சமீபத்தில் தெரிவித்தார். ஆனால் இந்த வாக்காளர்கள் நிச்சயம் காஷ்மீரை சேர்ந்தவர்களாக இருக்க முடியாது எனவும், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை வாக்காளர்களாக பதிவு செய்ய முயற்சி நடப்பதாகவும் காங்கிரஸ், தேசிய மாநாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு தேசிய மாநாடு கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா நேற்று அழைப்பு விடுத்திருந்தார். இதில் காங்கிரஸ், மக்கள் ஜனநாயக கட்சி உள்பட 9 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா, வெளி மாநில வாக்காளர்களை சேர்த்து, காஷ்மீரின் அடையாளத்தை சீர்குலைக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். இந்த நடவடிக்கையை எந்த நிலையிலும் எதிர்ப்போம் என்றும் தெரிவித்தார்.இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பா.ஜனதா, மக்களை தவறாக வழிநடத்தும் பிரசாரத்தை எதிர்க்கட்சிகள் மேற்கொள்வதாக குற்றம் சாட்டியுள்ளது. 18 வயதை பூர்த்தியடைந்த அனைத்து குடிமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை அரசியலமைப்பு வழங்குவதால் உள்ளூர் அல்லது வெளியூர் என்ற கேள்விக்கே இடமில்லை என காஷ்மீர் பா.ஜனதா தலைவர் ரவிந்தர் ரெய்னா தெரிவித்தார்.