காங்கிரசின் தற்போதைய நிலைமை பரிதாபம் - சிவசேனா


காங்கிரசின் தற்போதைய நிலைமை பரிதாபம் - சிவசேனா
x

ராஜஸ்தான் மாநாட்டில் காங்கிரசின் தலைமை பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றும், அந்த கட்சியின் தற்போதைய நிலைமை பரிதாபகரமாக உள்ளது என்றும் சிவசேனா தெரிவித்துள்ளது.

சிவசேனா விமர்சனம்

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் சிந்தனை அமர்வு மாநாடு சமீபத்தில் நடந்தது. கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த இந்த மாநாட்டில், குஜராத் மற்றும் இமாசலபிரதேச சட்டசபை தேர்தல், 2014-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் காங்கிரசில் ஒருவருக்கு ஒரு பதவி என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் மராட்டியத்தில் காங்கிரசுடன் கூட்டணி ஆட்சியை பகிர்ந்துள்ள சிவசேனா, காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு மாநாடு குறித்து விமர்சித்து உள்ளது.

இதுபற்றி அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'சாம்னா' தலையங்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நிலைமை பரிதாபகரம்

2024-ம் நாடாளுமன்ற தேர்தலுக்கு பா.ஜனதா ஏற்கனவே தயாராகி வரும் நிலையில், காங்கிரஸ் கடும் நெருக்கடியில் உள்ளது. காங்கிரசின் உதய்பூர் மாநாட்டில் ராகுல் காந்தி பல பிரச்சினைகளை தீர்க்காமல் விட்டுவிட்டார். குறிப்பாக காங்கிரஸ் தலைமை பிரச்சினை தீர்க்கப்படவில்லை. அந்த கட்சியின் தற்போதைய நிலைமை பரிதாபகரமாக உள்ளது. இது நாட்டின் ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

அதனால்தான் பல்வேறு மாநிலங்களில் பல தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். பீகார் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களில் கட்சிக்கு தலைவர்கள் இல்லை.

துணை நிற்க வேண்டும்

சுனில் ஜாக்கர், ஹர்திக் படேல், ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் காங்கிரசை விட்டு விலகுவது கட்சி தலைமையின் தோல்வியை காட்டுகிறது. விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில், வெகுஜன அடித்தளத்துடன் கூடிய அதன் தலைவர்களுக்கு காங்கிரஸ் துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சிவசேனாவின் இந்த விமர்சனத்தை காங்கிரஸ் கண்டித்துள்ளது. இதுகுறித்து மும்பை காங்கிரஸ் தலைவர் பாய் ஜக்தாப் கூறுகையில், "பழம்பெரும் கட்சியான காங்கிரசுக்கு யாருடைய ஆலோசனையும் தேவையில்லை" என்று தெரிவித்துள்ளார்.


Next Story