பீகாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு தடை ஐகோர்ட்டு அதிரடி


பீகாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு தடை ஐகோர்ட்டு அதிரடி
x

பீகாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஐகோர்ட்டு தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.

பாட்னா,

முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடைபெறுகிற பீகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. முதல் கட்ட கணக்கெடுப்பு, ஜனவரி 7-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடந்தது. இரண்டாவது கட்ட கணக்கெடுப்பு கடந்த மாதம் 15-ந் தேதி தொடங்கியது. இந்த மாதம் 15-ந் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பீகாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை, மக்களுக்கு சிறப்பாக சேவையாற்ற ஏதுவாக அவர்களின் பொருளாதார நிலைமை மற்றும் சாதி பற்றிய விவரங்கள்தான் சேகரிக்கப்படுகின்றன என முதல்-மந்திரி நிதிஷ் குமார் கூறி வருகிறார்.

இந்த நிலையில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக சமூக அமைப்பு ஒன்றும், பல்வேறு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தனர். ஆனால் அவர்களின் வழக்குகளை விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். ஐகோர்ட்டில் முறையிடுமாறு அவர்கள் அறிவுறுத்தினர்.

அதைத் தொடர்ந்து சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக பாட்னா ஐகோர்ட்டில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி கே.வினோத் சந்திரன், நீதிபதி மதுரேஷ் பிரசாத் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது நீதிபதிகள், " சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நிறுத்த வேண்டும், ஏற்கனவே பெறப்பட்ட விவரங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும், இந்த வழக்கில் இறுதித்தீர்ப்பு வரும் வரையில் அவற்றை யாருடனும் பகிர்ந்துகொள்ளக்கூடாது" என அதிரடியாக உத்தரவிட்டனர்.

இந்த வழக்குகளை பரிசீலித்தபோது, மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு அடிப்படை ஆதாரம் உள்ளது என நீதிபதிகள் குறிப்பிட்டனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மாநிலத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்குகளின் அடுத்த கட்ட விசாரணையை வரும் ஜூலை மாதம் 7-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

பீகாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு தடை விதித்திருப்பது, அந்த மாநில அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.


Next Story