அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து மேல்-சபையில் கடும் வாக்குவாதம்


அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து மேல்-சபையில் கடும் வாக்குவாதம்
x

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து கர்நாடக மேல்-சபையில் கடும் வாக்குவாதம் உண்டானது.

பெங்களூரு:

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து கர்நாடக மேல்-சபையில் கடும் வாக்குவாதம் உண்டானது.

பழைய ஓய்வூதிய திட்டம்

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 19-ந் தேதி பெலகாவியில் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் துணை சபாநாயகர் ஆனந்த் மாமணி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு சபை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரின் 9-வது மற்றும் கடைசி நாள் கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு பெலகாவி சுவர்ண விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. கர்நாடக மேல்-சபையில் கேள்வி நேரத்தில் தல்வார் சாபண்ணா, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் புதிய ஓய்வூதிய திட்டத்தை மாற்றிவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதில் அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சட்டத்துறை மந்திரி மாதுசாமி, "கடந்த 2004-ம் ஆண்டு மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்தது. அதன்பிறகு 2006-ம் ஆண்டு அனைத்து மாநில அரசுகளும் அதை அமல்படுத்தியுள்ளது. அதன் பிறகு பணி நியமனங்கள் குறித்த உத்தரவில் புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துமாறு கேட்கக்கூடாது என்று அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது அதை மறந்துவிட்டு தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துமாறு கேட்பது சரியல்ல. கர்நாடகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு சம்பளமாக ரூ.80 ஆயிரம் கோடி வழங்கப்படுகிறது. ஓய்வூதியத்திற்கும் அதிகளவில் பணம் செலவழிக்கப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த சாத்தியமில்லை. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, சட்டசபையில் விவாதம் நடத்தப்பட்டு அனைவரின் கருத்துகளையும் கேட்டு அறிந்த பிறகு உரிய முடிவு அறிவிப்பதாக கூறியுள்ளார். நிதித்துறையின் ஆலோசனை பெற்று உரிய முடிவு எடுக்கப்படும்" என்றார்.

கடும் வாக்குவாதம்

அப்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பிரகாஷ் ஹுக்கேரி, "அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி பெங்களூருவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக முதல்-மந்திரி ஏற்கனவே கூறியுள்ளார். இந்த நிலையில் மந்திரி மாதுசாமி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடியாது என்று தெளிவாக கூறியுள்ளார். அவரது இந்த கருத்து தூண்டிவிடும் வகையில் உள்ளது" என்றார்.

அப்போது மந்திரி மாதுசாமி எழுந்து பிரகாஷ் ஹுக்கேரி கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்தார். அந்த நேரத்தில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் உண்டானது. மந்திரி மாதுசாமி, "பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்ததே மத்தியில் காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான். அதை நீங்கள் தற்போது அரசியல் நோக்கத்துடன் எதிர்க்கிறீர்கள். அதனால் நான் தூண்டிவிடவில்லை. நீங்கள் தான் தூண்டிவிடும் கருத்துகளை கூறுகிறீர்கள்" என்றார்.


Next Story