'நாங்கள் தயாரிக்கும் காலணிகளை மக்கள் வாங்குவது இல்லை'; காலணி தைக்கும் தொழிலாளிகள் வேதனை


நாங்கள் தயாரிக்கும் காலணிகளை மக்கள் வாங்குவது இல்லை; காலணி தைக்கும் தொழிலாளிகள் வேதனை
x

‘நாங்கள் தயாரிக்கும் செருப்புகளை மக்கள் வாங்குவது இல்லை’ என்று காலணி தைக்கும் தொழிலாளிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

பெங்களூரு:

காலணி அணியாமல்....

நமது முன்னோர்கள் பெரும்பாலும் காலணிகளை அணிந்திருக்க மாட்டார்கள். ஆனால் தற்போதைய நவீன காலக்கட்டத்தில் காலணி அணியாமல் யாரும் வெளியே செல்வது இல்லை. நாம் அவசர வேலையாக வெளியே செல்லும் போது காலணிகள் அறுந்து போகும் சம்பவங்களும் அரங்கேறி இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் காலணிகளை தைத்து தரும் தொழிலாளர்கள் நமக்கு பெரும் உதவியாக இருப்பார்கள்.

5 முதல் 10 நிமிடங்களில் அறுந்து போன காலணிகளை, காலணி தைக்கும் தொழிலாளர்கள் நமக்கு தைத்து கொடுத்து விடுவார்கள். இதற்காக அவர்கள் மக்களிடம் இருந்து பெரிய தொகை வாங்குவது இல்லை. ஆனாலும் ஒரு சிலர் அந்த தொழிலாளிகளிடம் கூட பேரம் பேசுவார்கள். இந்த நிலையில் காலணி தைக்கும் தொழிலாளர்களிடம் அவர்களின் வருமானம், வாழ்வாதாரம் பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:-

சில சலுகைகள்

பெங்களூரு ராஜாஜிநகர் ராஜ்குமார் ரோட்டில் நடைபாதையில் காலணி தைக்கும் கடை வைத்து நடத்தி வரும் சம்பங்கி ராமய்யா என்பவர் கூறியதாவது:-

நான் கடந்த 27 ஆண்டுகளாக காலணி தைக்கும் தொழில் செய்து வருகிறேன். இந்த தொழிலில் எனக்கு போதுமான வருமானம் கிடைக்கிறது. தினமும் ரூ.400 முதல் ரூ.500 வரை வருமானம் கிடைக்கிறது. இந்த வருமானத்தை வைத்து தான் வாழ்வாதாரம் ஓடுகிறது. தினமும் 20 முதல் 30 பேர் காலணி தைக்க வருவார்கள். காலணி தைக்க வருபவர்களில் பெரும்பாலா னோர் ஏழை, எளிய மற்றும் நடுத்தர வகுப்பை சேர்ந்த மக்கள் தான்.

அவர்களிடம் நாங்கள் கூடுதல் தொகை கேட்பது இல்லை. நியாயமான முறையில் காலணி தைத்து கொடுக்கிறேன். அரசிடம் இருந்து என்னை போன்ற காலணி தைக்கும் தொழிலாளி களுக்கு சில சலுகைகள் கிடைக்கிறது. நாங்கள் தயாரிக்கும் காலணிகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவது இல்லை. இது வருத்தம் அளிக்கிறது.

இவ்வாறு சம்பங்கி ராமய்யா கூறினார்.

ரூ.1 லட்சம் கடன்

ராஜாஜிநகர் ராம்மந்திர் மைதானம் அருகே காலணி தைக்கும் கடை நடத்தி வரும் சந்துரு என்பவர் கூறுகையில், 'நான் கடந்த 30 ஆண்டுகளாக காலணி தைக்கும் தொழில் செய்து வருகிறேன். தினமும் போதிய அளவு வருமானம் கிடைக்கிறது. ஒரு சில நாட்களில் ரூ.1,000 வரை கூட வருமானம் கிடைக்கும். ஆனால் தினமும் சராசரியாக ரூ.400 முதல் ரூ.500 வரை கிடைக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் பெரிய பணக்காரர்கள் யாரும் காலணி தைக்க வந்தது இல்லை. ஆனால் நடுத்தர மக்கள், ஏழை, எளிய மக்கள் தான் அதிகளவில் காலணியை தைய்த்து போடுகிறார்கள். கொரோனா காலத்தில் காலணி தைக்கும் தொழிலாளிகள் வாழ்வாதாரம் இன்றி சிரமப்பட்டோம்.

ஆனால் அப்போது எங்களுக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. காலணி தைக்கும் தொழிலாளிகளுக்கு சங்கம் உள்ளது. அங்கிருந்து உதவிகள் கிடைத்தது. அரசு சார்பில் நடைபாதையில் காலணி தைக்கும் கடை வைத்து உள்ள தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. அதில் ரூ.30 ஆயிரத்தை மானியமாக வழங்குகிறார்கள். மீதம் ரூ.70 ஆயிரத்தை திரும்ப செலுத்தினால் போதும். கடன் தொகையை செலுத்தவும் எங்களுக்கு கால நிர்ணயம் எதுவும் இல்லை. நான் எனது கடையில் சொந்தமாக காலணிகளை தைத்து வியாபாரத்திற்கு வைத்து உள்ளேன். ஆனால் நாங்கள் தைய்த்த காலணிகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

காலணிகள் கிடைப்பது இல்லை

பெங்களூரு யஷ்வந்தபுரத்தில் வசித்து வரும் காய்கறி வியாபாரியான பூமாலி என்ற பெண் கூறும்போது, காலணி அறுந்து போனால் ஏழை, எளிய மக்களால் உடனடியாக புது காலணிகளை வாங்க முடியாது. பணக்காரர்கள் உடனடியாக வாங்குவார்கள். புதிய காலணி அறுந்து விட்டால் அதை தூக்கி வீச வேண்டும் என்றெல்லாம் கிடையாது. அந்த காலணியை தைத்து சில நாட்கள் பயன்படுத்தலாம். காலணி தைகும் கடையில் அதிக காசு கேட்பது இல்லை.

இவ்வாறு ராணி கூறினார்.

லாபிகா என்ற இளம்பெண் கூறுகையில், இன்றைய நவீன காலத்து பெண்கள் சாதாரண காலணிகளை விட விலை உயர்ந்த காலணிகளை அணிவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். 'ஹீல்ஸ் காலணிகளை அணிவதில் பெண்களுக்கு அதிக ஆர்வம் உள்ளது. புதிதாக வாங்கும் ஹீல்சுகள் அறுந்து போனால் அதை தூக்கி வீச முடியாது. அதிக விலைக்கு கொடுத்து வாங்கிவிட்டு காலணிகளை தூக்கி வீசினால் நன்றாக இருக்காது. நாம் வாங்கும் விலை உயர்ந்த காலணிகள் அடுத்த முறை கடைகளில் கிடைப்பது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story