வெளிமாவட்ட மக்கள் சிக்கமகளூரு விடுதிகளில் தங்க அனுமதி இல்லை கலெக்டர் உத்தரவு

வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் சிக்கமகளூருவில் உள்ள விடுதிகளில் தங்குவதற்கு அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
சிக்கமகளூரு-
நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 11-ந் தேதி வரை வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் சிக்கமகளூருவில் உள்ள விடுதிகளில் தங்குவதற்கு அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
விடுதிகளில் தங்க அனுமதி
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்தநிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர், போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தநிலையில் சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் கலெக்டர் ரமேஷ் பேசியதாவது:-
சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் யாரும் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்க வந்தால் உடனே தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம். இந்தநிலையில் சிக்கமகளூரு மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. அந்த விடுதிகளில் நாளை(ஞாறுக்கிழமை) முதல் வருகிற 11-ந் தேதி வரை வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் யாரையும் தங்குவதற்கு உரிமையாளர்கள் அனுமதிக்க கூடாது. அதாவது வாக்குப்பதிவு மறுநாள் வரை தங்குவதற்கு அனுமதிக்க கூடாது.
சுற்றுலா பயணிகள்
தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம் சிக்கமகளூருவுக்கு வர வாய்ப்பு உள்ளது. இதனால் இதுகுறித்து மாவட்டத்தில் உள்ள அந்தந்த போலீஸ் நிலையத்திற்கு வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை என நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. விடுதியில் சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கி இருந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட யாரையும் விடுதியில் தங்க வைக்க கூடாது. தங்கும் விடுதிகளில் அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்க வாய்ப்பு உள்ளது. எனவே போலீசார் தங்கும் விடுதிகளில் அவ்வப்போது சோதனை நடத்த வேண்டும். மாவட்டத்தில் மதுபானங்கள் கடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.