பா.ஜனதாவுக்கு எதிராக மக்கள் எழுச்சி பெற்றுள்ளனர்


பா.ஜனதாவுக்கு எதிராக மக்கள் எழுச்சி பெற்றுள்ளனர்
x

குமாரசாமியின் பஞ்சரத்னா யாத்திரையால் பா.ஜனதாவுக்கு எதிராக மக்கள் எழுச்சி பெற்றுள்ளதாக எச்.டி.ரேவண்ணா கூறினார்.

ஹாசன்:-

முன்னாள் பிரதமர் தேவேகவுடா

ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவராக இருந்து வருபவர் தேவேகவுடா. இவருக்கு 2 மகன்கள். அவர்களில் மூத்தவர் எச்.டி.ரேவண்ணா. 2-வது மகன் குமாரசாமி. இதில் குமாரசாமி முன்னாள் முதல்-மந்திரி ஆவார். இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இதையொட்டி எச்.டி.ரேவண்ணாவின் மனைவி பவானி, தான் ஹாசன் தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிட இருப்பதாகவும், கட்சி சார்பில் தனக்கு டிக்கெட் வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

அவர் தன்னிச்சையாக இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இது ஜனதா தளம்(எஸ்) கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் குமாரசாமி, எச்.டி.ரேவண்ணா ஆகியோருக்கு இடையே பிளவு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இதையடுத்து இப்பிரச்சினையை தற்போதைக்கு கைவிடுமாறு தேவேகவுடா, இருவருக்கும் அறிவுறுத்தி இருக்கிறார்.

யானை பலம்

இந்த நிலையில் நேற்று எச்.டி.ரேவண்ணா தனது மனைவி பவானி மற்றும் குடும்பத்துடன் ஒலேநரசிப்புராவில் உள்ள லட்சுமி நரசிம்மசாமி கோவில் திருவிழாவில் கலந்து கொண்டார். மேலும் தேரோட்டத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேவேகவுடாவுக்கு தற்போது உடல்நலம் சரியில்லை. அதனால் அவர் ஓய்வெடுத்து வருகிறார். ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு தற்போது மக்கள் அமோக ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். குமாரசாமியின் பஞ்சரத்னா யாத்திரையால் மக்கள் பா.ஜனதாவுக்கு எதிராக எழுச்சி பெற்றுள்ளனர். இந்த முறை ஜனதா தளம்(எஸ்) கட்சி தனது சொந்த பலத்தில் ஆட்சி அமைக்கும். ஹாசனில் உள்ள 7 தொகுதிகளிலும் ஜனதா தளம்(எஸ்) கட்சி அமோக வெற்றிபெறும். என் குலதெய்வத்தை தற்போது வணங்கியது எனக்கு யானை பலம் கிடைத்ததுபோல் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story