ஜெகதீஷ் ஷெட்டரை கர்நாடக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்; எடியூரப்பா ஆவேசம்


ஜெகதீஷ் ஷெட்டரை கர்நாடக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்; எடியூரப்பா ஆவேசம்
x
தினத்தந்தி 17 April 2023 12:15 AM IST (Updated: 17 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஜெகதீஷ் ஷெட்டரை கர்நாடக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று எடியூரப்பா ஆவேசமாக கூறினார்.

பெங்களூரு:

கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

துரோகம் செய்துள்ளார்

எங்கள் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜனதாவை விட்டு விலகுவதாக கூறியுள்ளார். அவர் பா.ஜனதாவில் அனைத்து பதவிகளையும் அனுபவித்துள்ளார். மந்திரி, எதிர்க்கட்சி தலைவர், முதல்-மந்திரி பதவிகளை அவருக்கு வழங்கினோம். அவருக்கு நாங்கள் என்ன குறை வைத்தோம். அதிகாரம் இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை.

அவரை எம்.பி.யாக நியமனம் செய்து மத்திய மந்திரி பதவி வழங்குவதாக கட்சி மேலிடம் உறுதியளித்தது. மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு டிக்கெட் வழங்கவும் கட்சி தயாராக உள்ளது. ஆனால், இதை எல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டு அவர் காங்கிரஸ் பக்கம் செல்ல தயாராகியுள்ளார். இதன் மூலம் பா.ஜனதாவுக்கு அவர் துரோகம் செய்துள்ளார். கர்நாடக மக்கள் அவரை மன்னிக்க மாட்டார்கள்.

யாராலும் தடுக்க முடியாது

நான் உள்பட பா.ஜனதா தலைவர்கள் வட கர்நாடகத்தில் தீவிரமாக பிரசாரம் செய்து, ஜெகதீஷ் ஷெட்டரின் உண்மை முகத்தை அம்பலப்படுத்துவோம். அவரது வீட்டிற்கே பா.ஜனதா மேலிட தலைவர்கள் நேரில் சென்று சமதானப்படுத்தியுள்ளனர். ஆனாலும் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்ளவில்லை. கட்சிக்கு புதிய ரத்தம் பாய்ச்ச வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய முகங்களுக்கு கட்சி மேலிடம் டிக்கெட் வழங்கியுள்ளது.

ஈசுவரப்பா, எஸ்.அங்கார், ரகுபதி பட் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கட்சி மேலிடத்தின் முடிவை ஏற்று கொண்டுள்ளோம். இதற்காக அவர்களை நான் பாராட்டுகிறேன். சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது. தலித், பழங்குடியினர் உள்ளிட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்து சமூக நீதியை நிலைநாட்டியுள்ளோம்.

தயாராக உள்ளோம்

கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி லிங்காயத் சமூகத்தை உடைக்க முயற்சி செய்தது. அதற்கு அக்கட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டினர். ஜெகதீஷ் ஷெட்டரும், லட்சுமண் சவதியும் தங்களின் தவறை உணர்ந்து மீண்டும் எங்கள் கட்சிக்கு வந்தால் அவர்களை வரவேற்க நாங்கள் தயாராக உள்ளோம். அவர்களுக்கு உரிய பதவிகளை வழங்குவோம்.

வருகிற 2023-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா குறைந்தது 25 தொகுதிகளில் வெற்றி பெறும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.


Next Story