தேச கட்டமைப்பு, வளர்ச்சிக்கு கேரள மக்கள் முக்கிய பங்காற்றி உள்ளனர்: ஜே.பி. நட்டா பேச்சு


தேச கட்டமைப்பு, வளர்ச்சிக்கு கேரள மக்கள் முக்கிய பங்காற்றி உள்ளனர்:  ஜே.பி. நட்டா பேச்சு
x

தேச கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கு கேரள மக்கள் முக்கிய பங்காற்றி உள்ளனர் என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசியுள்ளார்.

திருவனந்தபுரம்,

பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டு கால ஆட்சியானது கடந்த மே 30-ந்தேதி நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், எடுக்கப்பட்ட ஒவ்வொரு முடிவும், ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களின் வாழ்வை மேம்படுத்தும் விருப்பத்துடனான வழிகாட்டுதலின்பேரில் மேற்கொள்ளப்பட்டது.

வளர்ச்சி அடைந்த ஓர் இந்தியாவை கட்டமைக்க நாம் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று அவர் டுவிட்டரில் பதிவிட்டார். இந்த நிலையில், பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனையை பற்றி பல்வேறு இடங்களில் பா.ஜ.க. சார்பில் பொது கூட்டங்கள் நடத்தப்பட்டு விளக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, கேரளாவில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திருவனந்தபுரம் நகருக்கு இன்று வருகை தந்து உள்ளார். அவரை அக்கட்சி தொண்டர்கள் சிறப்பான முறையில் வரவேற்றனர்.

அவர் கூட்டத்தில் பேசும்போது, தேச கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கு கேரள மக்கள் முக்கிய பங்காற்றி உள்ளனர். இடது ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியோரின் கீழ்த்தர அரசியலால், கேரள மக்களின் அனைத்து திறமையான பணிகளும் வீணாகி விட்டன என்று அவர் பேசியுள்ளார்.

கடந்த மே 30-ந்தேதி முதல் வருகிற 30-ந்தேதி வரை ஒரு மாத காலம் அக்கட்சியின் தலைவர்கள், மந்திரிகள் உள்ளிட்டோர் கூட்டங்களை நடத்தி, நாட்டில் பிரதமர் மோடி அரசின் வளர்ச்சி பணிகளை மற்றும் பல்வேறு நல திட்டங்களை சாதனைகளை எடுத்து கூறி வருகின்றனர்.


Next Story