பா.ஜனதாவின் சர்வாதிகார ஆட்சியை மக்கள் அகற்ற வேண்டும்
பா.ஜனதாவின் சர்வாதிகார ஆட்சியை மக்கள் அகற்ற வேண்டும் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறினார்.
பாகல்கோட்டை:-
40 சதவீத கமிஷன்
பாகல்கோட்டை மாவட்டத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்ற உத்தரவாத அட்டை வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். காங்கிரஸ் கட்சியால் மட்டுமே இது சாத்தியமாகும். மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியில் 40 சதவீதம் ஊழல் மட்டுமே நடக்கிறது. இது 40 சதவீத கமிஷன் ஆட்சியாகும்.
மக்கள் தக்க பாடம்
இந்த ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. பா.ஜனதாவின் சர்வாதிகார ஆட்சியை மக்கள் அகற்ற வேண்டும். 40 சதவீத கமிஷன் பெற்று ஆட்சி நடத்தும் பா.ஜனதாவுக்கு சட்டசபை தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதிகள் நூறு சதவீதம் நிறைவேற்றப்படும். இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்த போது கொடுத்த வாக்குறுதிகள் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவிடம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர், வீட்டில் மனைவி இல்லாவிட்டால் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை யாருக்கு வழங்கப்படும் என்று கேள்வி கேட்டார். அப்போது தாய், சகோதரி, மகள் என பெண்கள் இருக்க தான் செய்வார்கள். அவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி வீட்டில் தான் பெண்கள் இல்லை. அதனால் பிரதமர் மோடியிடம் உத்தரவாத அட்டையை கொடுக்க வேண்டாம் என்றும் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறினார்.