மாவட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு - மந்திரி, எம்.எல்.ஏ. வீடுகளுக்கு தீ வைப்பு ; பெரும் வன்முறை
மாவட்டத்தின் பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது.
அமராவதி,
ஆந்திர மாநிலத்தில் கொனசீமா என்ற மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தின் பெயரை மாற்ற அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, கொனசீமா மாவட்டத்தின் பெயரை டாக்டர் பிஆர் அம்பேத்கர் கொனசீமா மாவட்டம் என மாற்ற மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொனசீமா பரிரக்ஷனா சமிதி, கொனசீமா சாதனா சமிதி உள்பட பல்வேறு அமைப்புகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் ஒரு கட்டத்திற்கு மேல் வன்முறையாக மாறியது.
அப்போது, போராட்டக்காரர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் முயன்றபோது அவை தோல்வியிலேயே முடிந்தன.
போராட்டக்காரர்கள் அம்மாநில போக்குவரத்துத்துறை மந்திரி விஸ்வார்ப் மற்றும் எம்.எல்.ஏ. சதீஸ் ஆகியோரின் வீடுகளை தீயிட்டு கொளுத்தினர். இதனால், அப்பகுதியே போர் களம்போல காணப்பட்டது.
இதனை தொடர்ந்து வன்முறை நடந்த பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறை மாவட்டத்தின் வேறு பகுதிகளுக்கும் பரவுவதை தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர ரோந்து பணிகள் நடைபெற்று வருகிறது.