கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி


கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி
x

சிறப்பு நீதிமன்றம், பாஸ்கர ராமனை டெல்லிக்கு அழைத்துச் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

புதுடெல்லி,

பஞ்சாப் மாநிலம் மான்சாவில் ஒரு அனல்மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட சீன கம்பெனிக்கு, சீனாவில் இருந்து கூடுதல் ஊழியர்களை அழைத்து வர முறைகேடாக விசா வழங்கியதாக கூறப்படுகிறது. அதற்காக ரூ.50 லட்சம் பெற்றதாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய உள்துறை மந்திரியாக இருந்தபோது இந்த லஞ்ச விவகாரம் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதில் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக சென்னையில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடு, கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் உள்பட நாடு முழுவதும் 10 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.

மேலும் இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு நெருக்கமானவரான சென்னையைச் சேர்ந்த அவரது ஆடிட்டர் எஸ்.பாஸ்கரராமனை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை அவரை அதிரடியாக கைது செய்தனர்.

தொடர்ந்து, சென்னையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி கோரினர். இதை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்றம், பாஸ்கர ராமனை டெல்லிக்கு அழைத்துச் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, பாஸ்கர ராமனை மேல் விசாரணைக்காக சிபிஐ அதிகாரிகள் டெல்லிக்கு அழைத்து சென்றனர். அடுத்தகட்டமாக, கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்த திட்டமிட்டு, அவருக்கு சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விசா முறைகேடு வழக்கில் ஆடிட்டர் பாஸ்கர ராமன் முதல் குற்றவாளியாகவும், கார்த்தி சிதம்பரம் 2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story