வீட்டின் வளாகத்தில் புகுந்து வளர்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை


வீட்டின் வளாகத்தில் புகுந்து வளர்ப்பு நாயை  வேட்டையாடிய சிறுத்தை
x
தினத்தந்தி 7 July 2023 6:45 PM GMT (Updated: 7 July 2023 6:45 PM GMT)

கொள்ளேகால் தாலுகாவில் வீட்டின் வளாகத்தில் புகுந்து வளர்ப்பு நாயை சிறுத்தை ஒன்று வேட்டையாடியது.

கொள்ளேகால்,-

கொள்ளேகால் தாலுகாவில் வீட்டின் வளாகத்தில் புகுந்து வளர்ப்பு நாயை சிறுத்தை ஒன்று வேட்டையாடியது. இதுதொடர்பான காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன.

கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகாவிற்கு உட்பட்டது கெம்பண்ணாபாளையா கிராமம். இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வருபவர் நடராஜு. இவர் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இவர் தினமும் இரவில் வீட்டின் முன்பு அந்த நாயை கட்டி வைப்பது வழக்கம். அதுபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு அவர் தனது செல்லப்பிராணியான நாயை வீட்டின் முன்பு கட்டினார்.

பின்னர் அவர் வீட்டின் முன்பக்க கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு குடும்பத்துடன் தூங்கிவிட்டார். இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து நள்ளிரவில் வெளியேறிய ஒரு சிறுத்தை இரைதேடி கிராமத்திற்குள் புகுந்துள்ளது.

கண்காணிப்பு கேமராக்களில்...

பின்னர் அந்த சிறுத்தை நடராஜுவின் வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஏறி உள்ளே குதித்தது. சிறுத்தையை பார்த்த நாய் பயங்கரமாக குரைத்தது. இருப்பினும் அந்த நாயை, சிறுத்தை வேட்டையாடி கொன்றது. பின்னர் பாதியளவு இறைச்சியை தின்றுவிட்டு வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. மறுநாள் காலையில் எழுந்து வந்தநடராஜு, வளர்ப்பு நாய் செத்துக்கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

கிராம மக்கள் பீதி

அப்போது அதில் சிறுத்தை, நடராஜுவின் வீட்டின் சுற்றுச்சுவரில் ஏறி குதித்து நாயை வேட்டையாடிய காட்சிகள் பதிவாகி இருந்தது. அதையடுத்து அந்த சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று நடராஜுவும், கிராம மக்களும் கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில் அந்த சிறுத்தையை இரும்பு கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் உறுதி அளித்துள்ளனர். சிறுத்தை நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.


Next Story