கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கேரளாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு


கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கேரளாவில்   பெட்ரோல், டீசல் விலை  அதிகரிப்பு
x

பட்ஜெட்டில் அறிவித்தபடி கேரளாவில் இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை ரூ.2 உயர்கிறது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இது தவிர பத்திரப்பதிவு கட்டணம், மருந்துகளுக்கு ஏப்ரல் 1-ந் தேதி முதல் விலை உயர்த்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த விலை உயர்வுக்கு காங்கிரஸ், பா.ஜ.க., முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதுதொடர்பாக கேரளா முழுவதும் பல்வேறு போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. ஆனாலும் விலை உயர்வு அறிவிப்பை வாபஸ் பெற அரசு மறுத்து விட்டது.

இந்தநிலையில் பலத்த எதிர்ப்புக்கு இடையே இன்று (சனிக்கிழமை) முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது. தற்போது கேரளாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 107.98 ஆகும். இன்று முதல் பெட்ரோல் விலை ரூ.109.98 ஆக உயரும்.ஏற்கனவே கேரளாவை விட பெட்ரோல், டீசல் விலை தமிழ்நாட்டில் குறைவு ஆகும். இதனால் தமிழ்நாடு எல்லையில் வந்து கேரள வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசலை நிரப்பி வருவதை காண முடிகிறது. தற்போது 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதால் தமிழக எல்லைக்கு வரும் வாகன ஓட்டிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story