கல்லூரி மாணவர்களின் ஹால்டிக்கெட்டில் பிரதமர் மோடி, டோனி புகைப்படங்கள் விசாரணைக்கு உத்தரவு


கல்லூரி மாணவர்களின் ஹால்டிக்கெட்டில் பிரதமர் மோடி, டோனி புகைப்படங்கள் விசாரணைக்கு உத்தரவு
x

பாட்னா, செப்.12-

பீகார் மாநிலம் தர்பாங்கா மாவட்டத்தில் லலித் நாராயணன் மிதிலா பல்கலைக்கழகம் உள்ளது. அதனுடன் இணைந்த 3 கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான அனுமதி சீட்டுகள் (ஹால்டிக்கெட்), ஆன்லைன் மூலம் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டு வருகின்றன.

அதில், பி.ஏ. மூன்றாம் ஆண்டு படிக்கும் சில மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டில் பிரதமர் மோடி, நட்சத்திர கிரிக்கெட் வீரர் டோனி, பீகார் மாநில கவர்னர் பாகு சவுகான் ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மாணவர்களும் அதை பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனர். இந்த சம்பவம், சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் முஷ்டாக் அகமது கூறியதாவது:-

பொதுவாக, மாணவர்கள்தான் தங்களது புகைப்படம் மற்றும் இதர தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அவற்றை பரிசீலித்து, பல்கலைக்கழகம் ஆன்லைனில் அனுமதி சீட்டை வெளியிடும். ஆனால், சில குறும்புக்கார மாணவர்கள், பிரதமர் மோடி உள்ளிட்டோரின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இதை தீவிரமாக எடுத்துக்கொண்டு, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கும் பதிவு செய்யப்படலாம்.

இவ்வாறு அவர் கூறினார்

இதேபோல், 2 ஆண்டுகளுக்கு முன்பு, முசாபர்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவரின் ஹால்டிக்கெட்டில், பெற்றோர் பெயர் இம்ரான் ஹஸ்மி, சன்னி லியோன் என்று நடிகர்-நடிகையின் பெயரை தவறுதலாக குறிப்பிட்டு இருந்தது சர்ச்சையை கிளப்பியது.


Next Story