ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்..!


ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்..!
x

ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசா அருகே தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பதோடு, பலரும் படுகாயம் அடைந்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிக்னல் தொடர்பான மின்னணு அமைப்பில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இருப்பினும் ரெயில் விபத்து குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும் என்று மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஒடிசாவில் கோரமெண்டல் ரெயில் விபத்து தொடர்பாக உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

விசாரணையை இரு மாதங்களுக்குள் நிறைவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கவாச் பாதுகாப்பு முறையை அமல்படுத்த கோரியும் பொதுநல மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பொதுநல மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story