அருணாச்சல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு: ராணுவ அதிகாரிகள் தகவல்


அருணாச்சல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு: ராணுவ அதிகாரிகள் தகவல்
x

விபத்துக்கான காரணங்களை விசாரிக்க ராணுவ தலைமையகம் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

கவுகாத்தி,

அருணாச்சல பிரதேசத்தில், சியாங் மாவட்டத்தில் லிகாபலி என்ற இடத்தில் இருந்து, வழக்கமான பயிற்சிக்காக ராணுவத்தின் இலகுரக ஹெலிகாப்டர் நேற்று புறப்பட்டது. ஐந்து வீரர்களை சுமந்து சென்ற இந்த ஹெலிகாப்டர், மிக்கிங் என்ற கிராமத்தின் மலைப்பகுதியில் நேற்று காலை விபத்துக்குள்ளானது.

ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு பணியை நேற்று துவங்கியது. இந்த நிலையில், இன்று 5 வீரர்களின் உடல்களும் மீட்கப்பட்டன. விபத்தில் பலியான வீரர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ராணுவம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து குறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில்:-

வீரர்கள் பயணித்த ஹெலிகாப்டர், இரட்டை என்ஜின் கொண்ட ஆயுத அமைப்புடன் கூடியது. இது மேம்பட்ட இலகுரக 'ருத்ரா' ஹெலிகாப்டர் ஆகும். அவர்கள் பறந்தபோது வானிலை நன்றாக இருந்தது.

மேலும், 2 விமானிகளும் 600க்கும் மேற்பட்ட மணிநேரம் இத்தகைய ஹெலிகாப்டரை இயக்கிய அனுபவம் கொண்டவர்கள். இந்த ஹெலிகாப்டர், அரசு நடத்தும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் வடிவமைத்து உருவாக்கப்பட்டது.

விபத்திற்கு முன், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு, விமானிகள் வானொலித் தொடர்பு மூலம் அழைத்து செய்தி அனுப்பினர். அதில் ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப அல்லது எந்திரக் கோளாறு இருப்பதாகக் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், விபத்துக்கான காரணங்களை விசாரிக்க ராணுவ தலைமையகம் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

அருணாச்சல பிரதேசத்தில், இந்த மாதத்தில் நிகழ்ந்த இரண்டாவது விபத்தாகும். ஏற்கனவே, தவாங் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பைலட் உயிரிழந்தார்.


Next Story