ஹனூரில் சிறுத்தையை பிடிக்க 5 இடங்களில் இரும்பு கூண்டுகள் வைப்பு


ஹனூரில் சிறுத்தையை பிடிக்க 5 இடங்களில் இரும்பு கூண்டுகள் வைப்பு
x

ஹனூரில் தொடர் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க 5 இடங்களில் இரும்பு கூண்டுகள் வைத்து வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

கொள்ளேகால்:-

சிறுத்தை அட்டகாசம்

சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில், தொட்டமலபுரா, கக்கலிகுந்தி, கஞ்சஹள்ளி கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சிறுத்தை அட்டகாசம் அதிகமாக உள்ளது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு கக்கலிகுந்தியை சேர்ந்த பள்ளி மாணவி, கஞ்சஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆகியோரை சிறுத்தை தாக்கி உள்ளது. மேலும் கிராமங்களில் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி சிறுத்தை கொன்று வருகிறது.

இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். மேலும் அந்த சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.

5 இரும்பு கூண்டுகள்

இதனால், வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து தொட்டமலபுரா, கக்கலிகுந்தி, கஞ்சஹள்ளி கிராமங்களில் 5 இரும்பு கூண்டுகளை வைத்துள்ளனர். மேலும் அந்தப்பகுதிகளில் 30 இடங்களில் கேமராவும் பொருத்தி உள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், சிறுத்தையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து 5 இடங்களில் இரும்பு கூண்டு வைக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அந்த சிறுத்தையை பிடிப்போம். இதனால் மக்கள் பீதியடைய வேண்டாம் என்றார்.


Next Story