காஷ்மீரில் பயங்கர தாக்குதல் நடத்த திட்டம்; லஷ்கர் இ தொய்பா இயக்க இளைஞர்கள் கைது

காஷ்மீரில் உள்ளூர் தலைவர்கள், சிறுபான்மை சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்த இருந்த லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் சமீப காலங்களாக இந்துக்கள், காஷ்மீரி பண்டிட்டுகள் உள்ளிட்டோர் மீது நடந்து வரும் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த தாக்குதல்களை நடத்துவதற்கு கடந்த ஆண்டு செப்டம்பரிலேயே பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு சதி திட்டம் தீட்டியிருந்தது என்று இந்திய உளவு அமைப்பு சமீபத்தில் அதிர்ச்சி தகவலையும் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், பாராமுல்லா மாவட்டத்தின் போலீஸ் சூப்பிரெண்டு ரயீஸ் எம். பட் செய்தியாளர்களிடம் கூறும்போது, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தில் சமீபத்தில் இணைந்த 2 இளைஞர்களை கைது செய்துள்ளோம்.
காஷ்மீரின் உள்ளூர் தலைவர்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்த இவர்களை பயன்படுத்த இருந்த நிலையில், அதனை தடுக்கும் வகையில் அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதனால், பெரிய அளவிலான தாக்குதலை தடுத்து நிறுத்தி உள்ளோம். அவர்களிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகள், வெடிக்க தயாராக உள்ள 18 தோட்டாக்கள் மற்றும் 3 கைத்துப்பாக்கி மேகசின்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
அவர்களிடம் நடந்த விசாரணையில், வடகாஷ்மீர் மட்டுமின்றி தெற்கு காஷ்மீரிலும் பயங்கரவாதிகள் தீவிரமுடன் செயல்பட்டு வருகின்றனர் என கண்டறிந்து உள்ளோம் என அவர் கூறியுள்ளார்.






