குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு பிரதமர் 2% அதிக வாக்குகளை பரிசளித்துள்ளார் - அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் ஆட்சியை கவிழ்க்கும் பாஜகவின் 'ஆபரேஷன் லோட்டஸ்' முயற்சி தோல்வி அடைந்துவிட்டதாகவும் சட்டப்பேரவையில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
புதுடெல்லி,
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி அரசை கவிழ்க்க முயற்சிப்பதாக (ஆபரேஷன் லோட்டஸ்) மத்திய பா.ஜனதா அரசு மீது முதல்-மந்திரி கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார். இதில் முக்கியமாக, கலால் கொள்கை விவகாரத்தில் சி.பி.ஐ. வழக்கில் சிக்கியுள்ள துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா, தான் ஆம் ஆத்மியை விட்டு விலகினால் தன் மீதான வழக்குகளை வாபஸ் பெறலாம் என பா.ஜனதா கூறியதாக ஏற்கனவே அம்பலப்படுத்தி இருந்தார். இதைப்போல பல எம்.எல்.ஏ.க்களை அச்சுறுத்தியும், பணம் கொடுத்தும் தன் பக்கம் இழுக்க முயற்சிப்பதாக ஆம் ஆத்மி பகீர் குற்றச்சாட்டை கிளப்பி இருந்தது. எம்.எல்.எ.க்களுக்கு ரூ.20 கோடி வரை பேரம் பேசப்படுவதாகவும் புகார் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து தனது அரசுக்கான பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் முதல்-மந்திரி கெஜ்ரிவால், சட்டசபையின் நடப்பு கூட்டத்தொடரில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் யாரும் பாஜக வசம் செல்லவில்லை என்பதை நிரூபிப்பதற்காக டெல்லி சட்டசபையில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தாமாக முன்வந்து நம்பிக்கை வாக்கு கோரினார். அப்போது ஆம் ஆத்மியின் 62 எம்.எல்.ஏக்களில் 58 பேர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எஞ்சியுள்ள 4 பேரில் ஒருவர் சபாநாயகர். மற்ற மூன்று பேர் மட்டுமே அவைக்கு வரவில்லை. இதன் மூலம் டெல்லி சட்டப்பேரவையில் தமது அரசுக்கு உள்ள பெரும்பான்மையை மீண்டும் கெஜ்ரிவால் நிரூபித்தார்.
பின்னர் சட்டசபையில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்,
ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களின் நேர்மையை நிரூபிக்கும் விதமாகவே தாம் அவையில் நம்பிக்கை வாக்கு கோரியதாக தெரித்தார். அவைக்கு வராத 3 ஆம்ஆத்மி எம்.எல்.ஏக்களில் இருவர் வெளிநாடுகளில் உள்ளதாகவும், ஒருவர் சிறையில் உள்ளதாகவும் கெஜ்ரிவால் விளக்கம் அளித்தார்.
எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் பாஜகவின் முயற்சி மற்ற மாநிலங்களில் வேண்டுமானால் எடுபடும் ஆனால் டெல்லியில் எடுபடாது எனக் கூறிய முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் 'ஆபரேஷன் லோட்டஸ்' தோல்வி அடைந்துவிட்டதாக தெரிவித்தார். துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ சோதனை நடத்திய பின்னர் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள குஜராத்தில் ஆம்ஆத்மியின் வாக்குசதவீதம் 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.