இந்திய டெஸ்ட் போட்டியை பார்க்க பிரதமர் மோடி மைதானத்துக்கு வருகை
முதல் நாள் போட்டியை பிரதமர் மோடியுடன் இணைந்து ஆஸ்திரேலிய பிரதமர் பார்க்கிறார்.
அகமதாபாத்,
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனிஸ், இந்தியாவுக்கு 4 நாள் பயணமாக நேற்று வந்தார். அவருடன் மந்திரிகள் உள்பட 27 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவும் வந்துள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறை ஆகும். முதலில், குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கு வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் அவரை குஜராத் மாநில முதல்-மந்திரி பூபேந்திர படேல் வரவேற்றார். சபர்மதி ஆசிரமம் வரவேற்பை முடித்துக்கொண்டு, அந்தோணி அல்பனிஸ், சுதந்திர போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி வசித்த சபர்மதி ஆசிரமத்துக்கு சென்றார். அவருடன் முதல்-மந்திரி பூபேந்திர படேலும் சென்றார். ஆசிரமத்தை சுற்றி பார்த்தார். புகைப்படங்களை பார்வையிட்டார். காந்தி சிலைக்கு மரியாதை செய்தார். பின்னர், ஆஸ்திரேலிய பிரதமர் கவர்னர் மாளிகைக்கு சென்றார். அங்கு நடந்த ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.
கிரிக்கெட் போட்டி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று காலை தொடங்குகிறது.
இந்தநிலையில் இந்திய - ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியை பார்க்க அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்துக்கு பிரதமர் மோடி வந்தார். 4-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனியுடன் பிரதமர் மோடி கண்டுகளிக்கிறார். பிரதமர் மோடி வருகையொட்டி மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.