முந்தைய அரசுகளின் பணிகளை தொடருவதை மட்டுமே மோடி அரசு செய்கிறது - ப.சிதம்பரம் கருத்து
முந்தைய அரசுகளின் பணிகளை தொடருவதை மட்டுமே மோடி அரசு செய்வதாக ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி ஜெர்மனியில் முனிச் நகரில் நேற்று முன்தினம் இந்தியர்களிடையே பேசும்போது, 2014-ம் ஆண்டுக்கு பிறகு தனது அரசு செய்து வரும் சாதனைகளை குறிப்பிட்டார். எல்லா கிராமங்களுக்கும் மின்சாரம் வந்து விட்டதாக அவர் கூறினார்.
இதை சுட்டிக்காட்டி முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
எல்லா கிராமங்களுக்கும் மின்சாரம் வந்து விட்டதாக பிரதமர் மோடி கூறிய அதே நாளில், ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவின் சொந்த கிராமம் அருகே ஒரு குக்கிராமத்துக்கு மின்சாரம் வழங்க போர்க்கால அடிப்படையில் பணி நடப்பதாக செய்தி வந்துள்ளது.
மின்சாரம் இல்லாதது அந்த ஒரு குக்கிராமம் மட்டுமல்ல. இன்னும் பல்வேறு உட்புற பகுதிகளிலும், கிராமங்களிலும் மின்சாரம் இல்லாததை ஒப்புக்கொள்ள வேண்டும்.
2014-ம் ஆண்டுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட சாதனைகளை பிரதமர் மோடி ஒப்புக்கொண்டிருக்க வேண்டும். முந்தைய அரசுகள் தொடங்கிய பணிகளை தொடரும் வேலையை மட்டுமே அவரது அரசு செய்கிறது என்பதையும் ஒப்புக்கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.