உலக அளவில் சிறந்த மீட்புக் குழுவாக, நமது அடையாளத்தை உருவாக்க வேண்டும் - பிரதமர் மோடி
உலக அளவில் சிறந்த மீட்புக் குழுவாக, நமது அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,
துருக்கியின் தென்கிழக்கு மாகாணத்தில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், பிப்ரவரி 6 அதிகாலையில் தாக்கியது.
அதைத் தொடர்ந்து 40 க்கும் மேற்பட்ட பின் அதிர்வுகள் துருக்கி மற்றும் அண்டை நாடான சிரியாவில் ஏற்பட்டது. இதனால் கட்டடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் ஆயிரக்கணக்கானவர்கள் சிக்கிக் கொண்டனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 46,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துருக்கியில் உள்ள மூன்று லட்சத்திற்கும் அதிகமான குடியிருப்புகள் இடிந்து விழுந்தது, பலர் இன்னும் காணவில்லை.
இந்நிலையில் பல்வேறு நாடுகள் துருக்கிக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன. நட்பு நாடான இந்தியாவும் "ஆபரேஷன் தோஸ்த்" மூலம் மீட்பு உதவிகளை வழங்கியது. அதையடுத்து, நேற்று தனது மீட்பு பணியை முடித்து இந்திய மீட்புப்படை தாயகம் திரும்பியது. இதை அடுத்து தங்களுக்கு உதவி வழங்கியதற்காக இந்தியாவுக்கு துருக்கியைச் சேர்ந்த மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்நிலையில், மீட்பு படையினருடன் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார், அப்போது பேசிய அவர்,
உங்களை நினைத்து நாடு பெருமை கொள்கிறது. இந்தியா மனிதநேயத்தை முதன்மையாக கொண்ட நாடு. உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக கருதுகிறோம். குடும்ப உறுப்பினர் ஒருவர் சிக்கலில் இருக்கும்போது, அதற்கு உதவுவது இந்தியாவின் கடமை.
துருக்கியில் நிலநடுக்கம் ஏற்றப்பட்ட உடனே இந்திய மீட்பு படை உடனடியாக அங்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உடனே இந்தியா எப்படி வந்தது என்பதை உலகமே வியந்து பார்க்கிறது. இது உங்கள் தயார்நிலையையும், உங்கள் பயிற்சி திறன்களையும் காட்டுகிறது. நமது தேசிய மீட்பு படை வீரர்கள் 10 நாட்கள், துருக்கியில் பணியாற்றிய விதம் பாராட்டுக்குரியது.
இன்று உலகில் இந்தியா மீது நல்லெண்ணம் உள்ளது. பேரழிவு ஏற்படும் போதெல்லாம், இந்தியா முதலில் வந்து உதவிகளை வழங்குகிறது.
நேபாளத்தில் நிலநடுக்கப்பாதிப்பு, மாலத்தீவுகள், இலங்கை என எங்கு பிரச்சினை ஏற்பட்டாலும் இந்திய மீட்புக் குழுவினர் சென்று உதவி செய்கின்றனர்.
கடந்த ஆண்டு உக்ரைன் நாட்டில் கடும் பனி, குளிரில் தவித்த மக்களுக்கு தேவையான பொருட்களை அனுப்பி உதவி செய்ததையும் அவர் சுட்டிக் காட்டினார். குஜராத்தில் தானும் மீட்புக் குழுவினருடன் பணியாற்றியதாகவும் மோடி நினைவுக் கூர்ந்தார்.
இது தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, '2001ம் ஆண்டு குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது, மீட்புக் குழுவில் நானும் சேர்ந்து பணியாற்றினேன்.அப்போது இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்பது கடினமான பணி என்பது புரிந்தது.எனவே உங்கள் சேவையை பாராட்டுகிறேன்,'என்றார்.