'நன்றி நண்பரே' காங்கிரஸ் முதல்-மந்திரியை புகழ்ந்த பிரதமர் மோடி


நன்றி நண்பரே காங்கிரஸ் முதல்-மந்திரியை புகழ்ந்த பிரதமர் மோடி
x

பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ் முதல்-மந்திரியை பிரதமர் மோடி புகழ்ந்த நிகழ்வு அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்-மந்திரியாக அசோக் கெலாட் செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, ராஜஸ்தான் மாநில அரசியலில் தற்போது பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. முதல்-மந்திரி அசோக் கெலாட்டிற்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான சச்சின் பைலட் போர்கொடி தூக்கியுள்ளார்.

ராஜஸ்தானில் கடந்த பாஜக ஆட்சி காலத்தில் ஊழல் நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் முதல்-மந்திரி அசோக் கெலாட் முறையான விசாரணை, நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி சச்சின் பைலட் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், ராஜஸ்தான் காங்கிரசில் பரபரப்பு, குழப்பமுமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், ராஜஸ்தானின் அஜ்மீரில் இருந்து டெல்லி வரையிலான வந்தேபாரத் ரெயில் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் பங்கேற்று வந்தேபாரத் ரெயில் திட்டத்தை தொடங்கி வைத்தார். ஜெய்ப்பூரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் பங்கேற்றார்.

வந்தே பாரத் துவக்க நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, அசோக் கெலாட் அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தற்போதிய சவாலான அரசியல் சூழ்நிலையில் பல பிரச்சினைகளை கெலாட் சந்தித்து வரும்போது வளர்ச்சி மற்றும் ரெயில்வே தொடர்பான திட்டங்களில் கெலாட் பங்கேற்றுள்ளார்.

கெலாட் என் மீது வைத்துள்ள நம்பிக்கை எங்கள் நட்பிற்கு வலிமை சேர்க்கிறது. நமது நட்பில் நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.


Next Story