சர்வதேச சவால்களுக்கு தீர்வு காண கருத்தொற்றுமை வேண்டும் - பிரதமர் மோடி வலியுறுத்தல்


சர்வதேச சவால்களுக்கு தீர்வு காண கருத்தொற்றுமை வேண்டும் - பிரதமர் மோடி வலியுறுத்தல்
x

சர்வதேச சவால்களுக்கு தீர்வு காண கருத்தொற்றுமை நிலவ வேண்டும் என்று ஜி20 வெளியுறவு மந்திரிகள் மாநாட்டில் பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

ஜி20 நாடுகள் அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை தாங்குகிறது. இந்தநிலையில், டெல்லியில் ஜி20 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு நேற்று நடந்தது.

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன், ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லவ்ரோவ், சீன வெளியுறவு மந்திரி கின் காங், ஜெர்மன் வெளியுறவு மந்திரி அன்னலேனா பேயர்பாக், இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளவர்லி, ஐரோப்பிய யூனியன் பிரதிநிதி ஜோசப் பாரல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காந்தி பிறந்த மண்

இந்த மாநாட்டில், பிரதமர் மோடியின் வீடியோ உரை ஒளிபரப்பப்பட்டது. அதில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-

வளர்ச்சி, பொருளாதார மீண்டெழும் தன்மை, நிதி ஸ்திரத்தன்மை, நாடு கடந்த குற்றங்கள், ஊழல், பயங்கரவாதம், உணவு, எரிசக்தி பாதுகாப்பு ஆகியவை உலகம் சந்திக்கும் சவால்களாக உள்ளன. இவற்றுக்கு தீர்வு காண உலகம் ஜி20 அமைப்பை நம்பிக்கையுடன் பார்க்கிறது.

இந்த பிரச்சினைகளில் கருத்தொற்றுமை ஏற்படுத்தி, உறுதியான பலன்களை அளிக்கக்கூடிய திறன் ஜி20-க்கு இருக்கிறது. அதற்கு கருத்தொற்றுமை ஏற்படுத்த வேண்டும். புவிஅரசியல் பதற்றநிலை தொடர்பான கருத்து வேறுபாடுகள், நம்மிடையிலான ஒத்துழைப்பை பாதிக்க அனுமதிக்கக்கூடாது.

காந்தி, புத்தர் பிறந்த மண்ணில் நீங்கள் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். எனவே, இந்திய பாரம்பரியங்களில் இருந்து உத்வேகம் பெறுங்கள். நம்மை பிரிக்கும் விஷயத்தில் கவனம் செலுத்தாமல், ஒன்றுபடுத்தும் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள்.

கடன்சுமை

உலக நாடுகளிடையே ஆழ்ந்த பிளவு நிலவும்போது, நீங்கள் சந்தித்து இருக்கிறீர்கள். புவிஅரசியல் பதற்றத்தால், உங்கள் ஆலோசனை பாதிக்கப்படலாம். இந்த பதற்றத்தை எப்படி தணிக்கலாம் என்பதற்கு நம் அனைவருக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும்.

உலகின் முன்னணி பொருளாதார நாடுகளாகிய நமக்கு இந்த அரங்கத்தில் இல்லாத நாடுகளுக்கும் பாடுபட வேண்டிய கடமை இருக்கிறது.

பல்வேறு வளரும் நாடுகள், தாங்க முடியாத கடன்சுமையில் சிக்கித் தவிக்கின்றன. தங்கள் மக்களுக்கு உணவு மற்றும் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய போராடுகின்றன.

முக்கிய பங்கு

பணக்கார நாடுகள் உருவாக்கிய புவி வெப்பமயமாதலால் மேற்கண்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. தங்களது முடிவுகளால் பாதிக்கப்பட்ட நாடுகளின் குரலை கேட்காமல், எந்த குழுவும் சர்வதேச தலைமைப் பொறுப்பை கோர முடியாது.

கொரோனா பரவலின்போது, உலகளாவிய வினியோக சங்கிலி அறுந்தது. வளரும் நாடுகள் கடன் சுமையில் தவித்தன. இந்த பின்னணியில், சமச்சீரான நிலையை ஏற்படுத்துவதில் ஜி20-க்கு முக்கிய பங்கு இருக்கிறது. அதை செய்வீர்கள் என்று நம்புகிறேன் என்று அவர் பேசினார்.


Next Story