சர்வதேச விமான கண்காட்சி; பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
பெங்களூருவில் விமான கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக நேற்று இரவு பிரதமர் மோடி பெங்களூருவுக்கு வந்தார். விமான கண்காட்சியை அவர் இன்று தொடங்கி வைத்து விமானங்களின் சாகசங்களை கண்டுகளிக்க உள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, 14-வது சர்வதேச விமான கண்காட்சி எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 17-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக உள்ளன. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கி வைக்க உள்ளார்.
இதில், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். விமான கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்தார். அவரை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பின்னர் எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து ராஜ்பவன் ரோட்டில் உள்ள கவர்னர் மாளிகைக்கு பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டு சென்றார். நேற்று இரவு அவர் கவர்னர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார். அதைத்தொடர்ந்து, இன்று காலையில் சர்வதேச விமான கண்காட்சியை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திரமோடி உரையாற்ற இருக்கிறார்.
காலை 9.30 மணியில் இருந்து காலை 11.30 மணிவரை விமானங்கள் சாகசங்களில் ஈடுபட உள்ளன. அதனை பிரதமர் நரேந்திர மோடி கண்டுகளிக்க உள்ளார். பின்னர் காலை 11.45 மணியளவில் எலங்காவில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் புறப்பட்டு செல்ல உள்ளார்.
சர்வதேச விமான கண்காட்சியின் நோக்கமே இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது, விமான உதிரிபாகங்கள் தயாரிப்பு, ராணுவ தளவாடங்கள் கொள்முதல், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதாகும்