மத்திய அரசின் கடனுதவி திட்டங்களுக்கான தேசிய டிஜிட்டல் "ஜன் சமர்த் தளம்" நாளை பிரதமர் மோடி முன்னிலையில் அறிமுகம்!


மத்திய அரசின் கடனுதவி திட்டங்களுக்கான தேசிய டிஜிட்டல் ஜன் சமர்த் தளம் நாளை பிரதமர் மோடி முன்னிலையில் அறிமுகம்!
x

நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் ஐகானிக் வார கொண்டாட்ட நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.

புதுடெல்லி,

நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் 'ஐகானிக் வாரம்' கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நாளை காலை 10:30 மணிக்கு டெல்லியின் விக்யான் பவனில் பிரதமர் மோடி துவக்கி வைத்து உரையாற்றுவார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்நிகழ்ச்சியில் 'ஜன் சமர்த் தளம்' என்ற கடன் இணைக்கப்பட்ட அரசின் திட்டங்களுக்கான தேசிய தளத்தை பிரதமர் அறிமுகப்படுத்த உள்ளார்.

இது அரசின் கடன் திட்டங்களை இணைக்கும் ஒரு டிஜிட்டல் தளமாகும். மேலும்,பயனாளிகளை, கடன் வழங்குபவர்களுடன் நேரடியாக இணைக்கும் முதல் தளம் இதுவாகும்.

அதன்படி,எளிதான மற்றும் சுலபமான டிஜிட்டல் நடைமுறைகளின் வாயிலாக, அரசின் பயன்களை பல்வேறு துறைகளுக்கு சரியான முறையில் வழங்கி, வழிகாட்டுவதன் மூலம், அவற்றின் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பதே ஜன் சமர்த் தளத்தின் முக்கிய நோக்கமாகும்.

அதனை தொடர்ந்து, கடந்த எட்டு ஆண்டுகளில், இரண்டு அமைச்சகங்களின் பயணங்களை விவரிக்கும் டிஜிட்டல் கண்காட்சியைப் பிரதமர் துவக்கி வைப்பார்.

மேலும், ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களின் சிறப்புத் தொகுப்பை வெளியிடுவார். இந்த சிறப்பு நாணயங்களில் நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி, அமிர்த மகோத்சவின் கருப்பொருள் இடம்பெற்றிருப்பதுடன், பார்வையற்றோர் எளிதில் கண்டறியும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள 75 இடங்களில் ஒரே சமயத்தில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதுடன், இந்த அனைத்து நிகழ்வுகளும் பிராந்திய நிகழ்ச்சியுடன் காணொலி வாயிலாக இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story