மைசூரு தசரா ஊர்வலத்தில் பிரதமர் மோடி பங்கேற்கமாட்டார் மந்திரி எஸ்.டி.சோமசேகர் பேட்டி
மைசூரு தசரா ஊர்வலத்தில் பிரதமர் மோடி பங்கேற்கமாட்டார் என்று மந்திரி எஸ்.டி.சோமசேகர் தெரிவித்துள்ளார்.
மைசூரு:
உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா, வருகிற 26-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. தசரா விழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தசரா விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைக்க உள்ளார். இதில் சிகர நிகழ்ச்சியாக அடுத்த மாதம்(அக்டோபர்) 5-ந்தேதி நடைபெறும் ஜம்பு சவாரி ஊர்வலம், அலங்கார ஊர்தி அணிவகுப்புகள் அடங்கிய தசரா ஊர்வலத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதுதொடர்பாக மைசூருவில் மாநில கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மைசூரு தசரா ஊர்வலத்தில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அழைப்பை ஏற்ற பிரதமர் மோடி பல்வேறு காரணங்களால் விழாவில் பங்கேற்கமுடியாது என்று தெரிவித்துள்ளார். தசரா ஊர்வலத்தை காண லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள். இந்த விழாவில் பிரதமரான நான் கலந்து கொண்டால் பாதுகாப்புக்கு பிரச்சினை ஏற்படும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். அதனால் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் தசரா ஊர்வலத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வரமாட்டார். ஆனால் தசரா விழாவை தொடங்கி வைக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு வருவது உறுதியாகி உள்ளது. அவருடன் 5 மத்திய மந்திரிகளும் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.