பிரதமர் மோடியின் தாயார் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை தகவல்
பிரதமர் மோடியின் தாயார் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஆமதாபாத்,
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 100). இவர் குஜராத் மாநிலம், காந்தி நகர் ரேசானில் பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் அமைந்துள்ள தனது இளைய மகன் பங்கஜ் மோடியின் இல்லத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று அவர் ஆமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய நோய் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து, மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட முதல் அறிக்கையில், ''அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீராபென் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டது.
தாயார் ஹீராபென் மோடி, ஆமதாபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதையடுத்து பிரதமர் மோடி நேரில் வந்து பார்த்து உடல் நலம் விசாரித்தார். ஹீராபென்னின் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் பிரதமரிடம் விளக்கிக் கூறினர்.
இந்நிலையில், மருத்துவமனை சார்பில் இன்று இரண்டாவது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஹீராபென் மோடி குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு என்ன பிரச்சினை என்பது குறித்தோ எத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்தோ மருத்துவமனை தரப்பில் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
வாய்வழி உணவு உட்கொள்கிறார் எனவும் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் செய்ய படுவார் என குஜராத் அரசு தகவல் தெரிவித்துள்ளது.