அயோத்தியில் நாளை தீபோற்சவம்: பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்


அயோத்தியில் 15 லட்சத்துக்கும் அதிகமான தீபங்களை ஏற்றி வழிபாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

லக்னோ,

தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் பிரமாண்ட தீபோற்சவம் நடந்து வருகிறது. சரயு நதிக்கரையில் லட்சக்கணக்கான தீபங்களை ஏற்றி வழிபடும் இந்த நிகழ்ச்சி 6-வது முறையாக இந்த ஆண்டும் நடக்கிறது.

இந்த ஆண்டு 15 லட்சத்துக்கும் அதிகமான தீபங்களை ஏற்றுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த பிரமாண்ட தீபோற்சவத்தை பிரதமர் மோடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் தொடங்கி வைக்கிறார். பின்னர் சரயு நதிக்கரையில் ஆரத்தி வழிபாட்டிலும் அவர் பங்கேற்கிறார்.

முன்னதாக அயோத்தியில் சாமி தரிசனம் செய்யும் அவர், ராம பிரானுக்கு சிறப்பு பூஜைகளும் செய்கிறார். அத்துடன் ராமர் ேகாவில் கட்டுமான பணிகளை அவர் ஆய்வு செய்கிறார். இந்த நிகழ்ச்சியில் 11 ராம்லீலா அலங்கார ஊர்திகள், அனிமேஷன் ஊர்திகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட உள்ளன. அத்துடன் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. அயோத்தி தீபோற்சவ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முதல் முறையாக பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.


Next Story