பி.எம்.டி.சி. பஸ்சில் சிக்கி கல்லூரி மாணவி படுகாயம்
பெங்களூருவில் பஸ்சில் ஏற முயன்ற கல்லூரி மாணவி மீது பி.எம்.டி.சி. பஸ் சக்கரத்தில் சிக்கி இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
பெங்களூரு:
தப்பி ஓட்டம்
கோலார் டவுன் பகுதியை சேர்ந்தவர் சில்பா (வயது 21). இவர் பெங்களூருவில் உள்ள ஞானபாரதி பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இதற்காக அவர் அந்த பகுதியில் உள்ள விடுதியில் தங்க உள்ளார். இவர் நேற்று ஞானபாரதி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்றார். அப்போது அங்கு வந்த பி.எம்.டி.சி. பஸ்சில் அவர் ஏற முயன்றார். ஆனால் அதற்குள் பஸ்சை டிரைவர் இயக்கியதாக தெரிகிறது.
இதனால் சில்பா கால் தவறி கீழே விழுந்தார். அப்போது அதே பஸ்சின் சக்கரம் சில்பா மீது ஏறி இறங்கியது. இதில் அவர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக நாகரபாவி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சாலை மறியல்
இதற்கிடையே விபத்து ஏற்படுத்திவிட்டு பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர். சம்பவம் குறித்து அறிந்ததும் சக மாணவ-மாணவிகள், திடீரென சாலையில் அமர்ந்தும், பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், டிரைவரின் அலட்சியத்தால், மாணவி விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். எனவே உடனடியாக டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும் என்றனர். மேலும், அவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அரசு பஸ்கள் செல்வதை தடுக்க வேண்டும். மாணவர்கள் நெரிசல்
அதிகம் உள்ள இடத்தில் பஸ்கள் இயக்கபடுவதால் தான் இதுபோன்ற விபத்துகள் நடைபெறுவதாக அவர்கள் கூறினர்.
போராட்டம்
இதற்கிடையே போராட்டம் குறித்து அறிந்ததும், பல்கலைக்கழக நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களிடம் போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர்.
மேலும், விபத்துக்கு காரணமானவர்கள் கைது செய்யப்படும்வரை போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் எச்சரித்தனர். இந்த நிலையில் தகவல் அறிந்து ஞானபாரதி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அவர்கள் போராட்டத்தை கைவிடுமாறு மாணவர்களிடம் கூறினர்.
ஆனால் அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தலைமறைவான டிரைவர், கண்டக்டர் இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.