பி.எம்.டி.சி. பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு; 3 பேர் படுகாயம்
பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பெங்களூரு:
பி.எம்.டி.சி. பஸ்கள்
பெங்களூருவில் உள்ள சாலைகள் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காட்சி அளிக்கும். அதிலும் குண்டும், குழியுமான சாலைகளால் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க பி.எம்.டி.சி. பஸ்கள் மோதி விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
கடந்த 24-ந்தேதி எலகங்கா போக்குவரத்து போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சாலையோரம் ஸ்கூட்டரில் நின்று செல்போனில் பேசிய பெண் மீது பி.எம்.டி.சி. பஸ் மோதியது. இதில் பெண் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த நிலையில் ஒரே வாரத்தில் 2-வது சம்பவமாக பி.எம்.டி.சி. பஸ் மோதி வாலிபர் உயிரிழந்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-
பெங்களூரு நாகவாரா-எலகங்கா சாலையில் பாரதியா சிட்டி சந்திப்பு பகுதியில் வாலிபர்கள் 4 பேர் இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது அவர்கள் சந்திப்பு அருகே இருந்த பஸ் நிறுத்தப்பகுதியில் தங்கள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பஸ் நிறுத்தம் அருகே பி.எம்.டி.சி. பஸ் ஒன்று அதிவேகமாக வந்தது.
வாலிபர் பலி
அப்போது திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற 2 கார்கள் மீது மோதியது. அதனை தொடர்ந்து அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர்கள் மீதும் மோதியது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற
3 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
3 பேர் படுகாயம்
இதுபற்றி அறிந்த சிக்கஜாலா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பி.எம்.டி.சி. பஸ்சில் பிரேக் பழுதானதால் தறிகெட்டு ஓடி விபத்து ஏற்பட்டது தெரிந்தது. மேலும் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர் ஆயுப் (வயது 35) என்ற தனியார் நிறுவன ஊழியர் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் மசூதிக், முன்னாவர், ரபியுல்லா கான் ஆகிய 3 பேர் என்பதும் தெரிந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரை கைது செய்துள்ளனர். மேலும், பி.எம்.டி.சி. பஸ்சையும் பறிமுதல் செய்துள்ளனர்.
ஏற்கனவே பி.எம்.டி.சி. பஸ் மோதி பெண் இறந்த நிலையில், தற்போது வாலிபரும் பி.எம்.டி.சி. பஸ் மோதியதில் உயிரிழந்த சம்பவம் பெங்களூரு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.