முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் பீகாரில் கைது..!
அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
மும்பை,
மும்பை கிர்காவ் பகுதியில் ரிலையன்ஸ் பவுண்டேசன் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு நேற்று மதியம் 12.57 மணிக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். அவர் ஆஸ்பத்திரியை குண்டு வைத்து தகர்க்க போவதாக மிரட்டல் விடுத்தார்.
மேலும் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நிடா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகியோருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர் அவர் இணைப்பை துண்டித்துவிட்டார்.
இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் டி.பி. மார்க் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை தீவிரமாக தேடி வந்தனர்.
இதுதொடர்பாக மும்பை போலீசார் வெளியிட்டுள்ள தகவலில், ரிலையன்ஸ் ஆஸ்பத்திரி லேண்ட்லைன் எண்ணுக்கு நேற்று மதியம் 12.45 மணிக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து, ஆஸ்பத்திரியை தகர்க்க போவதாக கூறி, அம்பானி குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என கூறினர்.
இந்த நிலையில் இன்று பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் ராகேஷ் குமார் மிஸ்ரா என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மிரட்டல் விடுக்கப்பட்ட மொபைல் போனையும் போலீசார் மீட்டுள்ளனர்.
பீகார் காவல்துறை உதவியுடன் நேற்று நள்ளிரவில் அந்த மிரட்டல் ஆசாமியைக் கைது செய்துள்ளனர். தற்போது பீகாரில் இருந்து மும்பைக்கு அந்த நபர் அழைத்து வரப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மும்பை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.