"மல்யுத்த வீராங்கனைகள் காவல்துறையினரால் நடத்தப்பட்ட விதம் கலக்கத்தை ஏற்படுத்துகிறது" - சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி


மல்யுத்த வீராங்கனைகள் காவல்துறையினரால் நடத்தப்பட்ட விதம் கலக்கத்தை ஏற்படுத்துகிறது - சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி
x
தினத்தந்தி 1 Jun 2023 7:20 AM IST (Updated: 1 Jun 2023 11:43 AM IST)
t-max-icont-min-icon

மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டு தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை தேவை என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வலியுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான, பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக, ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கங்களை வென்று தந்த வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா மற்றும் சாக்சி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு கூறி, அவரை கைது செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே நாடாளுமன்றம் நோக்கி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணி நடத்திய போது, டெல்லி போலீசார் அவர்களை கைது செய்து இழுத்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு உலக மல்யுத்த சம்மேளனம் கண்டனம் வெளியிட்டு உள்ளது. இதனை தொடர்ந்து ஒலிம்பிக் உள்பட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பெற்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப் போவதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அறிவித்தனர். பின்னர், விவசாய சங்க தலைவர் திகாயத் தலையிட்டு, 5 நாள் காத்திருக்கும்படி அவர்களிடம் கேட்டு கொண்டார்.

இந்த நிலையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:-

"மல்யுத்த வீரர், வீராங்கனைகள் காவல்துறையினரால் நடத்தப்பட்ட விதம் கலக்கத்தை ஏற்படுத்துகிறது. உள்நாட்டு சட்டத்துக்கு ஏற்ப இந்திய மல்யுத்த வீராங்கனைகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மீது பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பான விசாரணை முதல் கட்டத்தில் உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். இது தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத்தை எட்ட வேண்டும். இந்த நடைமுறைகளின்போது மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அதேநேரத்தில், இந்த விசாரணை விரைந்து முடிக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.


Related Tags :
Next Story