போராட்டத்தில் ஈடுபடும் மல்யுத்த வீரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நள்ளிரவு தள்ளுமுள்ளு பரபரப்பு...!


போராட்டத்தில் ஈடுபடும் மல்யுத்த வீரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நள்ளிரவு தள்ளுமுள்ளு பரபரப்பு...!
x

பாலியல் புகாரில் சிக்கியுள்ள மல்யுத்த சம்மேளன தலைவரை கைது செய்யக்கோரி வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி,

இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பா.ஜ.க. எம்.பியுமான 66 வயதான பிரிஜ் பூஷன் சரண் சிங் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மனரீதியாக துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டிய இந்திய முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுட்டனர். பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்தனர்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் உறுதியளித்ததையடுத்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் 3 நாட்கள் நடத்திய போராட்டத்தை முடித்துக்கொண்டனர்.

அதேவேளை, பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று அந்த விசாரணை அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அந்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும், பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷன் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் இருந்தது.

இதை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் கடந்த மாதம் 23ம் தேதி முதல் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர்.

இதனிடையே, பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி மல்யுத்த வீராங்கனைகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டதையடுத்து பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்வதாக கோர்ட்டில் டெல்லி போலீஸ் தெரிவித்தது.

பிரிஜ் பூஷன் மீது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ உள்பட 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் இதுவரை எந்த வித விசாரணையும் நடத்தப்படவில்லை. போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் இதுவரை கைது செய்யப்படவும் இல்லை.

இதனால், பிரிஜ் பூஷனை கைது செய்யும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கும் டெல்லி போலீசாருக்கும் இடையே நேற்று நள்ளிரவு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

டெல்லியில் நேற்று லேசான மழை பெய்தது. மழை இரவும் நீடித்ததால் மைதானத்தில் தரையில் படுத்து உறக்கி போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர் வீராங்கனைகள் கட்டில் கொண்டுவர முயற்சித்துள்ளனர். ஆனால், வீரர்களுக்கு மைதானத்திற்குள் கட்டில் கொண்டுவர போலீசார் அனுமதிக்கவில்லை.

மேலும், மைதானத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீசார் மதுபோதையில் வீரர், வீராங்கனைகளிடம் தகராறு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, நள்ளிரவு மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

போலீசார் தாக்கியதில் சில மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போலீசார் தங்களிடம் நடந்துகொண்ட விதம் குறித்து கண்ணீர் மல்க பேசிய காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை வினீஷ் போகத், எங்களை போலீசார் நடத்திய விதத்தை பார்க்கும்போது, எந்த மல்யுத்த வீரர்களும் நாட்டிற்காக விருதுகளை வாங்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன்' என்றார்.


Next Story