காற்று மாசுபாடு அதிகரிப்பு ஒட்டுமொத்த வட இந்தியாவின் பிரச்சனை: டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால்


காற்று மாசுபாடு அதிகரிப்பு ஒட்டுமொத்த வட இந்தியாவின் பிரச்சனை: டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால்
x

பஞ்சாப் மாநிலத்தில் வேளாண் கழிவுகளை எரிப்பது அதிகரித்து வருவதற்கு நாங்கள் முழு பொறுப்பேற்கிறோம் என்று அவர் கூறினார்.

புதுடெல்லி,

பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானுடன் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பஞ்சாப் மாநிலத்தில் வேளாண் கழிவுகள் எரிக்கப்பட்டதற்கு கெஜ்ரிவால் பொறுப்பேற்றார். அதிகரித்து வரும் காற்று மாசுபாடு குறித்து அவர் பேசியதாவது:-

காற்று மாசுபாடு என்பது டெல்லியின் பிரச்சனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த வட இந்தியாவின் பிரச்சனை. ஆம் ஆத்மி, டெல்லி அரசு அல்லது பஞ்சாப் அரசு மட்டும் இதற்கு பொறுப்பல்ல. இப்போது ஒருவர் மீது ஒருவர் பழிசுமத்தி விளையாடும் நேரம் இதுவல்ல.

மாசுபாட்டை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். வாகனங்களுக்கு ஏற்ற திட்டம் செயல்படுத்தப்பட வேண்டுமா என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். டெல்லியில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளையும் நாளை முதல் மூடுகிறோம்.காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு மத்திய அரசு ஒரு கூட்டு செயல் திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

பஞ்சாப் மாநிலத்தில் விவசாய நிலங்களில் வேளாண் கழிவுகளை எரிப்பது அதிகரித்து வருவதற்கு நாங்கள் முழு பொறுப்பேற்கிறோம். ஆனால், பஞ்சாபில் நாங்கள் ஆட்சி அமைத்து ஆறு மாதங்களே ஆகின்றன. அதைக் கட்டுப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பஞ்சாபில் பல்வகைப் பயிர்களை விளைவிக்க முயற்சிப்போம். பஞ்சாபில் உள்ள விவசாயிகளை அரிசியிலிருந்து மற்ற பயிர்களுக்கு மாற்ற முயற்சிப்போம். அடுத்த ஆண்டுக்குள் வேளாண் கழிவுகளை எரிப்பது குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story