சிக்கமகளூரு மாவட்டத்தில் குளங்கள் நிரம்பின; குளக்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு கட்டுப்பாடு


சிக்கமகளூரு மாவட்டத்தில் குளங்கள் நிரம்பின; குளக்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு கட்டுப்பாடு
x

தொடர் கனமழையால் சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள குளங்கள் நிரம்பின. இதனால் குளக்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

சிக்கமகளூரு;

வெள்ளப்பெருக்கு

சிக்கமகளூரு மாவட்டத்தில் இடைவிடாமல் கடந்த 15 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சிக்கமகளூரு மாவட்டத்தில் ஓடும் துங்கா, பத்ரா, ஹேமாவதி ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குடிநீருக்காக பயன்படுத்தப்படும் இரேகொலலே குளம், அய்யன்கெரே குளம், மதுகத்தே குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பி உள்ளன. மேலும் குளங்கள் நிரம்பி அவற்றில் இருந்து தண்ணீர் நிரம்பி வழிகின்றன.


5 பேர் பலி

அவற்றின் அழகை காண்பதற்காக ஏராளமான பொதுமக்கள் குளக்கரைகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை மழைக்கு 5 பேர் பலியாகி உள்ளனர்.

அவர்களில் 2 பேர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குளக்கரைகளில் மக்கள் அதிக அளவில் குவிந்து வருவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் இரும்பு தடுப்புகள் அமைத்து ஆபத்தான பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லாத வண்ணம் தடுத்துள்ளனர்.

கட்டுப்பாடு

மேலும் பாதுகாப்பான இடங்களில் நின்று பொதுமக்கள், குளங்களில் இருந்து தண்ணீர் வெளியேறும் அழகை ரசிக்கவும், செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுக்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

குளக்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு போலீசார் கட்டுப்பாடு விதித்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


Next Story