அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதி; மெட்ரோ ரெயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு


அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதி; மெட்ரோ ரெயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு
x

அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை, கர்நாடக அரசு அமலுக்கு கொண்டு வர இருப்பதால், பெங்களூருவில், மெட்ரோ ரெயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு:

அரசு பஸ்களில் இலவசம்

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் அறிவித்து இருந்தனர். அதன்படி, 135 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. நேற்று நடந்த மந்திரிசபை கூட்டத்தில் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் திட்டம் ஜூலை மாதம் 11-ந் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. அதாவது குளிர்சாதன வசதி, படுக்கை வசதி கொண்ட பஸ்களை தவிர்த்து, பி.எம்.டி.சி., கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

இதன் காரணமாக பெங்களூரு நகரில் பி.எம்.டி.சி. பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பி.எம்.டி.சி. பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்தால், பெங்களூருவில் மெட்ரோ ரெயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதாவது பெங்களூரு மெட்ரோ ரெயிலில் தினமும் 30 சதவீத பெண்கள் பயணம் செய்கிறார்கள்.

2½ லட்சம் பெண்கள் பயணம்

அவர்கள் அனைவரும் இலவச பயணம் மேற்கொள்வதற்காக பி.எம்.டி.சி. பஸ்களில் பயணித்தால், மெட்ரோ ரெயிலில் பெண்கள் அதிக அளவில் பயணிக்க மாட்டார்கள். இதனால் மெட்ரோ ரெயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலவச பயணத்திறக்காக 30 சதவீத பெண்களும் பஸ்களில் பயணம் செய்வார்களா?, குறைந்த நேரத்தில், கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க மெட்ரோ ரெயிலிலேயே அந்த 30 சதவீத பெண்களும் பயணிப்பார்களா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஏனெனில் பெங்களூருவில் தினமும் மெட்ரோ ரெயிலில் 5.80 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். அவர்களில் 2½ லட்சம் பேர் பெண்கள் ஆவார்கள். பெண் பயணிகளுக்காக மெட்ரோ ரெயிலில் தனியாக பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளது.

நஷ்டத்தில் மெட்ரோ ரெயில்

பெண்கள் அனைவரும் இலவச பயணம் மேற்கொள்வதற்காக அரசு பஸ்களில் தினமும் சென்றால், மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்படுவது உறுதி என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். ஏற்கனவே கொரோனா சந்தர்ப்பத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்படாததால் மெட்ரோ நிர்வாகம் பெரும் நஷ்டத்தை சந்தித்து இருந்தது. தற்போதும் மெட்ரோ ரெயில் நஷ்டத்தில் தான் இயங்கி வருகிறது.

இந்த சூழ்நிலையில் பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்களில் அனைத்து பெண்களும் இலவசமாக பயணம் மேற்கொள்ள அரசு அனுமதி வழங்கி இருப்பதன் மூலம், மெட்ரோ ரெயில் நிர்வாகம் மேலும் நஷ்டத்தை சந்திக்கும் என்றும், இதற்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.


Next Story