சுண்டிகொப்பா கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் மின்சாரம் துண்டிப்பு


சுண்டிகொப்பா கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் மின்சாரம் துண்டிப்பு
x

குஷால்நகரில் உள்ள சுண்டிகொப்பா கிராம பஞ்சாயத்து அலுவலகம் முறையான மின்கட்டணம் செலுத்தாததால் செஸ்காம் ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் பஞ்சாயத்து ஊழியர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

குடகு:-

மின் கட்டணம்

குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகாவில் உள்ளது சுண்டிகொப்பா கிராம பஞ்சாயத்து அலுவலகம். இந்த கிராம பஞ்சாயத்து அலுவலகம் தரப்பில் மாதந்தோறும் செஸ்காமிற்கு மின் கட்டணம் செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் செலுத்தாமல் பாக்கி வைத்தாக கூறப்படுகிறது. இதனால் நிலுவை கட்டணம் உள்பட ரூ.28 லட்சத்து 66 ஆயிரம் செலுத்த வேண்டியிருந்தது. இந்த மின் கட்டணத்தை கிராம பஞ்சாயத்து நிர்வாக அதிகாரிகள் செலுத்தாமல் இழுத்தடித்து வந்தனர்.

இதை அறிந்த செஸ்காம் நிர்வாகம், கிராம பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பிவிட்டனர். ஆனால் மின் கட்டணத்தை செலுத்தவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்த செஸ்காம் ஊழியர்கள் மின் சாரத்தை துண்டித்துவிட்டு சென்றனர். இதனால் ஊழியர்கள் மற்றும் அரசு பணிகள் முடங்கியதாக கூறப்படுகிறது.

மின்சாரம் துண்டிப்பு

உடனே கிராம பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மின் கட்டணத்தை செலுத்தும்படி ஊழியர்கள், அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து செஸ்காம் ஜூனியர் என்ஜினீயர் ஜெய்தீப் கூறியதாவது:-

கிராம பஞ்சாயத்து தரப்பில் தரப்பில் ரூ.67 லட்சம் வரை மின் கட்டணம் செலுத்தவேண்டியிருந்தது. செஸ்காம் அதிகாரிகள் மின்சாரத்தை துண்டித்தவுடன் ரூ.47 லட்சத்து 25 ஆயிரம் செலுத்தப்பட்டது.

இதையடுத்து மின்சாரம் வழங்கப்பட்டது. தற்போது அந்த நிலுவை தொகையுடன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு செலுத்தவேண்டிய தொகையும் சேர்த்து மொத்தம் ரூ.28 லட்சத்து 66 ஆயிரம் மின்கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. மின்சாரத்தை துண்டித்ததால் கட்டணம் செலுத்துவார்கள் என்று துண்டித்துவிட்டோம். இந்த நடவடிக்கை எடுத்து 7 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை கிராம பஞ்சாயத்து தரப்பில் எந்த பதிலும் வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story